
தனியார் ஊடகம் திருச்சியில் நடத்திய பட்டிமன்றம் வடிவிலான விவாத நிகழ்ச்சி தமிழகத்தில் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, அந்த நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வைரலானது அதே நேரத்தில் பெரியாரிஸ்ட் மற்றும் இன்னும் பிற இடதுசாரி இயக்க தலைவர்கள் அங்கு கூடி இருந்த கூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தனர்.
இந்த சூழலில் தற்போது இது குறித்து விவாதத்தில் பங்கேற்ற அருள்மொழி நீண்ட விளக்கம் அளித்து இருக்கிறார் அது பின்வருமாறு :- உங்கள் கலவர முயற்சிகள் எங்கள் கொள்கை அறுவடைக்கே பயன்படும் சங்கிகளே!
இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சியில் நியூஸ்18 தொலைக்காட்சி நடத்திய மக்கள்சபை(!)விவாதம் மூன்று நாட்கள் ஒளிபரப்பானது.
அந்த நிகழ்ச்சியைப் பார்த்த தோழர்கள் பலரும் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மட்டுமன்றி சங்கிகளின் திட்டமிட்ட காலித்தனம் பற்றிய கவலையையும் ஆலோசனைகளையும் எனக்கு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
திட்டமிட்டு கூட்டிவரப்பட்ட பலர் பாரத்மாதாகீ ஜே என்று அடிக்கடி கூவியதோடு் நான் பேசும்பொழுது எப்போது பிரச்சனையைத் தொடங்குவது என்று ஒருவரை ஒருவர் பார்த்தபடி தயாராவதையும் கவனித்தேன்.
பொதுவாக நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதற்காக அங்கு வந்திருந்த திராவிடர்கழகத்தின் மாவட்டத் தலைவர் தோழர் ஆரோக்கியராஜ் அவர்களும் மற்ற தோழர்களும் மகளிரணித் தோழர்களும் பிஜேபி சீனிவாசன் பேசும்போதும் பார்ப்பன சங்கத்தின் மணிகண்டன் மற்றும் அதன் தலைவர் நாராயணன் ஆகியோர் பேசும்போது மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டார்கள். ஆனால் “புதுத் துடைப்பம் நன்றாகப் பெருக்கும்” என்ற பழமொழிக்கேற்ப புதிய பிஜேபி சூரர்கள் நான்பேசும்போது குறுக்கீடு செய்து கொண்டே இருந்தார்கள். மேலும் தங்களால் முடிந்தவரை அநாகரீகமான கூச்சலை எழுப்பி தங்கள் இருப்பை காட்டிக்கொண்டார்கள். அதனை நான் குறிப்பிட்டு கண்டித்தபோது அவர்கள் கூச்சலிட்டபடி மேடைக்கு அருகில் திரண்டனர்.
உடனடியாக மாவட்டத் திராவிடர்கழகத் தலைவரும் திராவிடர்கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் அவர்களை எதிர்கொண்டு தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் ஒரு சிறு வன்முறையும் நடந்துவிடாமல் மிகுந்த பொறுப்புணர்சியோடு செயல்பட்டு காவிகளின் திட்டத்தை முறியடித்தார்கள்.
நிகழ்ச்சி நடைபெற்ற அன்றே திருச்சி மாவட்ட திராவிடர்கழக மகளிரணித் தோழர்கள் காவிகளின் நடவடிக்கை பற்றி பதிவிட்டதோடு சில நிமிட வீடியோவையும் பதிவிட்டதால் அச்செய்தி பரபரப்பானது.
பேராசியர் சுபவீ அவர்கள் காணொளிப்பதிவிலும் தோழர் ஓவியா அவர்கள் முகநூல் பதிவிலும் அதற்கான கண்டனத்தையும் இந்த சலசலப்புகளுக்கு எங்கள் இளம் பேச்சாளர்கள் கூட அஞ்சமாட்டார்கள் என்ற செய்தியையும் அழுத்தமாகப் பதிவு செய்தார்கள். நிகழ்ச்சி ஒளிபரப்பானபின்பு மார்க்சிய பொதுவுடைமை இயக்கத்தின் தோழர் பாலபாரதி அவர்கள் கண்டனம் தெரவித்துள்ளார். இன்னும் பல தோழர்கள் .. அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல தோழர்களின் கவலை காவல்துறை ஆற்றிவரும் மௌனசேவை பற்றியது. கடந்த பத்தாண்டுகளில் ஆர் எஸ் எஸ் ஆட்களின் ஊடுருவல் தமிழ்நாட்டின் அரசு, சட்டம், காவல், நீதி, கல்வி என அனைத்துக் கட்டமைப்பிற்குள்ளும் ஊடுருவி உள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.
இது ஒரு தனி நிகழ்வல்ல. தமிழ்நாட்டில் அவர்கள் நடத்தவிரும்பும் கலவரங்களுக்கான முன்னோட்டம். அதற்கு உதவத்தான் விபீடனர்களும் பிரகலாதன்களும் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள்.
நமது தோழர்களும் விழிப்பாக செயல்படவேண்டும் என்பதும் மிக முதன்மையான கருத்து.பிரச்சாரம் பிரச்சாரம் .. அதுதான் மக்களை பண்படுத்தும் என்றுதான் தந்தை பெரியார் ‘ஓயாது ஊர்தோறும் நடை நடந்தார்’ அவரது பாதையில் நாமும் தொடர்ந்து நடப்போம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் தங்கள் கொள்கை எளிதாக பரவும் பரப்பலாம் என பல இயக்கங்கள் கணக்கு போட்டு இருந்தன ஆனால் திமுக ஆட்சியில்தான் பாஜக மிக பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது, இந்த ஆத்திரத்தில்தான் அருள்மொழி போன்றோர் விமர்சனம் செய்து வருவதாக பலரும் அருள்மொழி கருத்திற்கு எதிர் கருத்து தெரிவிக்கின்றனர், காவல்துறையில் ஆர்எஸ்எஸ் ஊடுருவி இருக்கிறது என்றால் அந்த துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் என்ன செய்கிறார் என ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்ப அருள்மொழி போன்றோருக்கு தைரியம் இருக்கிறதா என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.