புதுதில்லி : லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இரண்டும் இணைந்து இந்திய ராணுவத்திற்காக லைட் டேங்குகளை 2023ல் உருவாக்க தொடங்கும். அதற்கான முன்மாதிரி தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும் என DRDO இயக்குனரான டாக்டர் சதீஷ் ரெட்டி ஒரு ஆன்லைன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இந்த லைட் டேங்குகள் மலைப்பாங்கான மற்றும் மலைப்பிரதேசங்களில் நடைபெறும் போருக்கு ஏற்றவகையில் இருக்கும். சீன PLA துருப்புக்கள் 15/ZTQ-15 ரக லைட் டேங்குகளை எல்.ஓ.சியில் நிலைநிறுத்தியுள்ளன. அந்த பகுதியில் இந்தியா தயாரிக்கப்போகும் லைட் டேங்குகளும் நிலைநிறுத்தப்படும். இதன் வளர்ச்சிப்பணிகள் மற்றும் ராணுவசோதனைகளுக்கு எல் அண்ட் டி நிறுவனமே முழுபொறுப்பாகும் என சதீஸ் ரெட்டி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய ராணுவம் உயரமான பகுதிகளில் பணியமர்த்த 25 டன்களுக்கும் குறைவான எடைகொண்ட 350 லைட் டேங்கர்களை வாங்குவதற்காக RFI வெளியிட்டிருந்தது. இந்த லைட் ரக பீரங்கிகளை தயாரிக்க மத்திய அரசு அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் மொத்த செலவிற்கான நிதியையும் வழங்க இருக்கிறது.
ஆத்ம நிர்பார் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் பாதுகாப்பு ஆயுதங்களின் மூல உபகரணங்கள் அனைத்தும் MSME எனப்படும் சிறுகுறு இந்திய நிறுவனங்களிடம் இருந்தே பெறப்படுகிறது. மேலும் இது ஒரு தற்சார்பு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. MSME நிறுவனங்களின் சமீபத்திய வளர்ச்சியை தொடர்ந்து வேலைவாய்ப்புக்களும் சிறு நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.