
இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஒரு பொற்காலத்தின் தொடக்கமாக, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை அப்படியே நம் பக்கம் திருப்பியுள்ளது. இது வெறும் காகித ஒப்பந்தம் அல்ல; இருபத்தியேழு ஐரோப்பிய நாடுகளின் சந்தை வாசல்கள் இந்தியத் தயாரிப்புகளுக்காகத் திறந்துவிடப்பட்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் எவ்விதத் தடையுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முடியும் என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் இந்தியத் தொழில்முனைவோர் அங்கு சென்று தங்கள் கிளைகளைப் பரப்பவும், பெரும் சந்தை வாய்ப்புகளைக் கைப்பற்றவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. இதற்குப் போட்டியாக ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரிட்டன், இந்தியாவுடன் இத்தகைய ஒப்பந்தத்தைச் செய்துவிட்டது. இப்போது ஐரோப்பாவின் சக்திவாய்ந்த 27 நாடுகளும் இந்தியாவுடன் கைகோர்த்திருப்பது, ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டமே இந்தியாவின் வர்த்தகக் குடையின் கீழ் வந்திருப்பதை உறுதி செய்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் ஒரு வரப்பிரசாதமாகும். இந்தியாவின் ஏற்றுமதி மையமாகத் திகழும் தமிழகத்திற்கு, குறிப்பாக பின்னலாடைத் தொழிலில் முன்னணியில் இருக்கும் திருப்பூர், தோல் பொருட்கள் உற்பத்தியில் பெயர் பெற்ற ஈரோடு மற்றும் ஆம்பூர், வாகன உதிரிபாக உற்பத்தியில் ஆசியாவின் டெட்ராய்டாக விளங்கும் சென்னை போன்ற நகரங்களுக்கு இது மிகப்பெரிய பாய்ச்சலைக் கொடுக்கும். ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிகள் மற்றும் தோல் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிகள் இனி குறையும் என்பதால், தமிழகத்தின் சிறு மற்றும் குறுந்தொழில்கள் சர்வதேசத் தரத்திற்குத் தங்களை உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஐரோப்பிய முதலீடுகள் தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் குவியும் போது, இங்குள்ள இளைஞர்களுக்குப் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தயாராகும் பொருட்கள் இனி ஐரோப்பியர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்றடையும் காலம் கனிந்துவிட்டது.
இந்தச் சூழலில் அடுத்த மாதம் கனடிய பிரதமர் மார்க் கோர்னி இந்தியா வருவது சர்வதேச அரசியலில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களும் விரைவில் கையெழுத்தாகக்கூடும் என்பதால், வட அமெரிக்கச் சந்தையிலும் இந்தியாவின் பிடி இறுகப்போகிறது. ரஷ்யா ஏற்கனவே இந்தியாவின் உற்ற நண்பனாக இருந்து வரும் வேளையில், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய ஆசியா மற்றும் அரபு நாடுகள் என உலக வரைபடத்தின் பெரும்பகுதி இந்தியாவின் செல்வாக்கிற்குள் வந்துவிட்டது. இது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. மற்ற நாடுகள் இந்தியாவுடன் இணக்கமாகச் செல்லும் போது, அமெரிக்கா மட்டும் ஒதுங்கி நிற்க முடியாது. எனவே, இனி அமெரிக்கா இறங்கி வந்து இந்தியாவுடன் மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. உலக நாடுகளின் அதிகார மையமாக பாரதம் உருவெடுத்து வருவதைத்தான் "உலகங்கள் யாயும் உன் அரசாங்கமே, ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே" என்ற வரிகள் நிதர்சனமாக்குகின்றன
