
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் 50 வயதான நவீத் அக்ரம் மற்றும் அவரது 24 வயதான மகன் சஜித் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேருமே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.
யூத மக்கள் பங்கேற்ற 'கடற்கரையோர ஹனுகா' (Chanukah by the Sea) எனப்படும் நிகழ்வின் போது பாண்டி கடற்கரையில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. தந்தை-மகன் இருவர் சேர்ந்துதான் இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். தந்தை 50 வயதான நவீத் அக்ரம் சம்பவ இடத்திலேயே அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் மகன் சஜித் அக்ரம் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.தாக்குதலின் தன்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் அடிப்படையில், இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகப் போலீசார் அறிவித்தனர். இத்தாக்குதல் சிட்னியின் யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட யூத வெறி தாக்குதல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலுக்குப் பிறகு ஆறு துப்பாக்கிகள் மீட்கப்பட்டதை போலீசார் உறுதிசெய்தனர். தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகில், நவீத் அக்ரமின் வாகனத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) உட்படப் பல சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டறியப்பட்டன. ஆஸ்திரேலியாவில் சமீப காலங்களில் நடந்த மோசமான தாக்குதல் இதுவாகும்.
ஏற்கனவே 1,17,000 யூத மக்கள் வாழும் ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்தே யூத மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாகக் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் சுமார் 166 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளன.
மெல்போர்னில் உள்ள அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயம் தீவைத்துக் கொளுத்தப் பட்டது. முன்னதாக 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் போண்டி அருகில் Lewis’ Continental Kitchenயூத எதிர்ப்பு பயங்கரவாதிகளால் தீ வைத்து அழிக்கப்பட்டது. இந்த வன்முறையில் தோராவின் Hebrew வரிகள் பொறிக்கப்பட்ட ஓலைச்சுவடி தீக்கிரை ஆனது. சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள யூதத் தலைவர்கள், தங்களுக்குப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் இருப்பதாகத் தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். ஏற்கெனவே பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலிய அரசின் கொள்கை யூத எதிர்ப்புக்கு எரியூட்டுவதாகக் குற்றஞ்சாட்டிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் யூத வெறுப்பின் “புற்றுநோய் செல்களை” கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் எச்சரித்திருந்தார்.
மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் தாயகமாக பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் பயங்கரவாத சம்பவங்களில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஈடுபடுவது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.இதற்கு அந்த நாட்டு அரசும், ராணுவமும் நேரடியாக பயங்கரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் ஆதரவே முக்கிய காரணம் என தொடர்ந்து பல்வேறு சர்வதேச அமைப்புகளில் குற்றம் சாட்டி வருகிறது இந்தியா . இத்தகைய சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஐ .நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் ஹரீஷ் பர்வதனேனி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை மேற்கோள் காட்டி, தாத்தா பாட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டு, பேரக்குழந்தைகளுக்குப் பொருத்தமான எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று கூறிய ஹரீஷ் பர்வதனேனி, ஐநா சபையின் அவசரச் சீர்திருத்தத்தின் தேவையையும் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானால் தூண்டப்படும் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் இந்தியா தனது முழு பலத்துடன் எதிர்கொள்ளும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அழுத்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
