24 special

கிட்னி திருட்டில் திமுக ? ஏழைகளை குறிவைத்த திமுக எம்.எல்.ஏவின் மருத்துவமனை! அதிர வைக்கும் பின்னணி..

MKSTALIN,ANANDHAN
MKSTALIN,ANANDHAN

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் கிட்னி திருட்டு. நாமக்கல்லில், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின், வறுமையைப் பயன்படுத்தி, திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் என்ற நபர் மூலம் நடைபெற்றுள்ள கிட்னி திருட்டு, நாட்டையே அதிர வைத்துள்ளது. குறிப்பாக, மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தும், திமுகவினருக்குத் தொடர்புடைய இன்னும் சில மருத்துவமனைகளில் வைத்தும் தான், தங்களுடைய கிட்னி எடுக்கப்பட்டது என்று, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 


தமிழகத்தில், கந்து வட்டி தடைச்சட்டம் உள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில், கிட்னி திருட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், கந்து வட்டி கடனைத் தீர்க்கவே சட்டவிரோதமாகக் கிட்னி விற்பனை செய்ய முன்வந்ததாகத் தெரிவிக்கின்றனர். விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களைக் கந்து வட்டிக்கு உள்ளாக்கி, பின்னர் கிட்னி திருடும் கும்பலில் சிக்க வைத்தது என, இந்த ஒட்டுமொத்த வலைப்பின்னலும், பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

இதற்கிடையே நாமக்கல்லில் சிறுநீரக திருட்டு வழக்கில் தொடர்புடைய திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மற்றும் சிதார் மருத்துவமனைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி சொற்ப விலைக்குத் திருடப்பட்ட சிறுநீரகங்கள் செல்வந்தர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரப்பாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகள் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் பகுதியாகும். இந்த பகுதிகளிலிருந்து மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினம் தோறும் உழைத்து சாப்பிடும் ஏழை, எளிய மக்களிடம் இருந்து சொற்பத் தொகைக்குத் திருடப்படும் சிறுநீரகங்கள், பல கோடி ரூபாய் கூட தர முன்வரும் செல்வந்தர்களுக்குப் கொடுக்கப்படுகிறது, சட்ட விரோத  கிட்னி மாற்றத்தின் மூலம்  கோடிக்கணக்கான பணப்புழக்கம் நடைபெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிறுநீரகங்கள் திருடப்பட்டு, வெளிநாட்டினருக்குப் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உடல் உறுப்புகள் திருட்டு என்பது உலகாளவிய பெரும் குற்றமாகக் கருதப்படும் நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான மருத்துவமனையிலேயே நடைபெற்றிருக்கும் அத்தகைய திருட்டு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.ஏழை, எளிய மக்களிடம் இருந்து சட்டவிரோதமாகத் திருடப்பட்ட சிறுநீரகங்கள் யார் யாருக்குப் பொருத்தப்பட்டுள்ளது? எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது? உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான விதிமுறைகளை மீறித் தான் பொருத்தப்பட்டதா? என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தனலட்சுமி சீனிவாசன் மற்றும் சிதார் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.இத்துடன் விசாரணையை முடித்துவிடாமல் சிறுநீரக திருட்டு வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என, பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திமுகவினராக இருக்கின்றனர். திமுக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையே, அவர்கள் இத்தனை தைரியமாகக் குற்றச் செயல்களில் ஈடுபடக் காரணம். அதனை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது போலச் செயல்படுகிறது முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகக் காவல்துறை. செயலழிந்து கிடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.