Tamilnadu

அஜித் தோவல் குறித்த முக்கிய தகவலை பகிர்ந்த அண்ணாமலை !

Annamalai's speech about Ajith Thoval
Annamalai's speech about Ajith Thoval

இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என புகழப்படும் அஜித் டோவல் குறித்து சிறப்பு பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து அவர் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு :-


இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் ஆக வெளியே தெரிய வந்திருக்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஜஸ்ட் எழுபத்திநான்கு வயதுதான் ஆகிறது. இந்திய நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் இணையற்ற பொறுப்பில் இவர் இதுவரை செய்த சாதனைகள் ஒவ்வொன்றும் பல சினிமா திரைக்கதைகளுக்குத் தீனி போடும்.

ரிக்‌ஷாக்காரராக, தள்ளுவண்டி வியாபாரியாக, தீவிரவாதியாக, மாற்று மதத்தினராக, வேலை இல்லாப் பட்டதாரியாக என்று மாறுபட்ட மாறுவேடங்களில் பயணித்து, சூப்பர் ஹீரோவாகச் செயல்பட்டு இந்திய நாட்டின் பாதுகாப்பை உயிரைப்பணயம் வைத்து உறுதி செய்தவர். உளவுத்துறையின் உச்சமாகப் போற்றப்படும்,

இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான ‘மொசாத்’தை எல்லாம் விஞ்சும் வகையில்,  பரமரகசியமாக, யாருக்கும் தெரியாமல், இவர் மேற்கொண்ட பல அதிரடி சாகச நடவடிக்கைகளால், நம் நாட்டு ராணுவ அதிகாரிகள், இவரை, 'இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்' எனக் குறிப்பிடுகின்றனர். 

‘அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில், பல்வேறு மாறுவேடங்களில், புனை பெயர்களில், போலி ஆவணங்களில் பயணித்து, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவத்திற்குத் தேவையான உளவுத் தகவல்களை, உடனடியாகத் தந்து உதவியவர் என்று அனைவரும் கொண்டாடும் அதிகாரி’ என்று இவரின் உடன் பணியாற்றியவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,  "இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" என்ற  வள்ளுவர் வழியில் அதாவது யாரிடம் எந்த பொறுப்பைத் தரவேண்டும் என்று ஆராய்ந்து அதை அவர்கள் வசம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்ற கலையில் நரேந்திர மோடி மிகச்சிறந்தவராகத் திகழ்கிறார்.  

நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நம் நாட்டு ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கவும், திரு அஜித் தோவலை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக  நியமிக்கிறார் பிரதமர் மோடி.  நாட்டின் மிக முக்கியமான பொறுப்பை, பிரதமரின் நம்பிக்கைக்குரிய பொறுப்பை கேரள கேடரில் தன் ஐ.பி.எஸ் பணியைத் தொடங்கிய இவர் ஏற்ற போது, யார் இந்த அஜித் ஜோவல் என்ற கேள்வி எல்லா மட்டத்திலும் எழுந்தது. 

நாட்டுப்பற்றுள்ள நல்லவர்கள் நாட்டிற்காகத் தன் உயிரையும் துச்சமாக மதித்துச் செயல்படுவார்கள்; அவர்களுக்கு நாட்டின் நலன் ஒன்றே மிக முக்கியமான இலக்கு என்பதற்கான ஒற்றை உதாரணம் அஜித் தோவல். அந்த அளவிற்குத் தன் ஆளுமையை வெளி உலகுக்குக் காட்டாமல் மறைத்து வைத்தது இவரின் அசுர சாதனை என்றால், அப்படிப்பட்ட திறமைசாலியை அடையாளம் கண்டு அங்கீகரித்த நம் நாட்டுப்பற்று மிக்க பிரதமரை எப்படிப் பாராட்டுவது,

பாகிஸ்தான் அரசில் உள்நாட்டு விவகாரங்கள் சிக்கலாகியுள்ள தருணம், வர்த்தகத்தைப் பெருக்கும் நோக்கில் சீனா - அமெரிக்கா இடையே பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை… நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றக் கூடிய முக்கிய முடிவினை எடுக்க, இதுதான் சரியான நேரம் எனக் கண்டறிந்து, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை நீக்க, நல்ல நாள் நல்ல நேரம் குறித்துக் கொடுத்து பிரதமருக்கு ஆலோசனை சொன்ன புரோகிதர் இவரே.

மிசோரம் மாநிலத்தில் 'மிசோ தேசியப் முன்னணி' எனும் தனி நாடு கேட்டுப் போராடும் தீவிரவாத இயக்கத்தின் அராஜகம் எல்லை மீறிச் சென்று கொண்டிருந்தது. அஜித் தோவல், தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டு அந்தத் தீவிரவாத படைகளில் சேர்ந்து, இந்திய ராணுவத்திற்கு ஒற்றனாகச் செயல்பட்டார். அந்த பயங்கரவாதிகளிடம்,  'தான்' இந்திய தேசத்திற்கு எதிராகக் களம் இறங்கியிருக்கும் ஒரு தீவிரவாதி எனக் காட்டிக் கொள்கிறார் அஜித் த

"மிசோ நேஷனல் ஃப்ரன்ட்" எனப்படும் தீவிரவாதிகளோடு பணியாற்றுகிறார் அஜித் தோவல்.  ஒரு கட்டத்தில் 'லால்டெங்கா' எனப்படும் பயங்கர ஆயுதங்களைத் தங்களிடத்தே கொண்ட கொடூரமான மிஸோ கமேண்டோக்களை அங்கிருக்கும் தன் வீட்டில் தங்க வைக்கிறார்.  தன் பிராமண மனைவியை அவர்களுக்காக பன்றிக்கறி  சமைத்துப் போட சொல்கிறார். 

"யார் இவர்கள் ?" என அவர் மனைவி கேட்க, "ஒரு  முக்கியமான ரகசிய நடவடிக்கையில், என்னோடு பணிபுரியும் சக ஊழியர்கள்” என்று மனைவியை சமாளிக்கிறார் அஜித் தோவல். பர்மாவின் 'அரக்கன்' பகுதியிலும், சீனாவிற்குள்ளும், அவர் யாரும் அறியாத வகையில் ஊடுருவி அங்குள்ள நிலையை ஆராய்ந்து, இந்திய ராணுவத்திற்குத் தகவல்கள் தெரிவித்து வந்தார். 

அதன் தொடர்ச்சியாக, மிசோ தேசிய முன்னனியில் இருந்த கமேண்டோக்களோடு நெருங்கிய நட்பை உருவாக்கி, அதனுள் பிளவுகளை உருவாக்கி, அந்த இயக்கத்தையே உருத் தெரியாமல் சிதைத்தார் அஜித் தோவல். 

அப்போது தனிநாடாக இருந்த சிக்கிம் இந்தியாவோடு இணைய விருப்பம் தெரிவித்திருந்தது. இந்த இணைப்புக்கு சீனா மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், கள ஆய்வு மேற்கொள்ள சிக்கிமிற்குள் ஒற்றனாக ஊடுருவினார் அஜித் தோவல்.  சிக்கிம் இந்தியாவோடு வெற்றிகரமாக இணைக்கப்பட்டதற்கு இவரின் மதிநுட்பமும் மிக முக்கிய காரணம் என்கிறார்கள் ராணுவ அதிகாரிகள்.

1980களில் காலிஸ்தான் எனும் பெயரில் சீக்கிய தீவிரவாதிகள் தனிநாடு கேட்டு போராடி வந்ததை மறக்க முடியுமா? அமிர்தசரஸ் சீக்கிய கோயில் முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் முழு கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.  இதற்கிடையே பொற்கோயிலுக்குள் 1984இலும் அதன் தொடர்ச்சியாகவும் இரு முறை இந்திய ராணுவம் நுழைந்து தாக்குதல் தொடுத்திருந்தது.  அந்த இரண்டு முறையும் பொது மக்கள் அதிகம் இருந்த நிலையில் உயிர்ச்சேம் அதிகமாகியது. 

இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தி, பின்னர் இந்திரா காந்தியின் படுகொலைக்கு வித்திட்டது. அதனால் 1988ல்  நடைபெற்ற ‘ஆபரேஷன் பிளாக் தண்டர்’ நடவடிக்கையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என தீர்மானித்திருந்தது இந்திய ராணுவம்.

அஜித் தோவல், ஒரு ரிக்க்ஷா ஓட்டுபவர் போல் நடித்து பொற் கோயிலுக்குள் ஊடுருவினார். புதிய நபரான அஜித் தோவல் பொற்கோயில் வளாகத்தில் சுற்றித் திரிவது காலிஸ்தான் பயங்கரவாதிகள் மத்தியில் பலத்த சந்தேகத்தை எழுப்பியது.  அவரை உளவாளி எனக்கண்டறிந்து அவரைக் காலிஸ்தான் தீவிரவாதிகள் பிடித்து விசாரித்த நிலையில், தான் ஒரு பாகிஸ்தானிய ஒற்றன் என்று அவர்கள் நம்பும்படி செய்தவர்.

காலிஸ்தான் இயக்கத்திற்கு தனி நாடு அமைக்க உதவுவதற்காக பாகிஸ்தானால் தான் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தன் உயிரையும், தன் நாட்டையும் காத்த மதிநுட்பம் மிக்கவர்தான் அஜித் தோவல். அஜித் தோவல் பொற்கோயிலுக்குள்ளே என்ன நடக்கிறது என்பதை இந்திய ராணுவத்திற்குத் தகவல் தந்த வண்ணம் இருந்தார்.

வெறும் நாற்பது பேரே பொற்கோயிலுக்குள் இருப்பார்கள் என இந்திய ராணுவம் கணித்திருந்த நிலையில் அஜித் தோவல், இருநூறு பேருக்கு மேல் உள்ளே இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, தாக்குதலை கைவிடுமாறும், பொற்கோயில் வளாகத்துக்குள் தேவையான மின்சாரத்தையும், தண்ணீர் இணைப்பையும் துண்டிக்குமாறும் ஆலோசனை கூறினார். 

உள்ளே இருந்த அஜித் தோவல் உள்ளிட்ட அனைவரும் கொதிக்கும் கோடையில் தண்ணீர், மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாக, வெறும் ஒன்பதே நாட்களில் உள்ளே இருந்த தீவிரவாதிகள் அனைவரும் ராணுவத்திடம் சரணடைந்தார்கள். ஆக கத்தியின்றி ரத்தமின்றி ஆபரேஷன் 'பிளாக் தண்டர்' வெற்றி பெற்றது, காலிஸ்தான் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்தார் அஜித் தோவல்.

'கரன் கர்ப்' எனும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அஜித் தோவலின் இந்தப் பங்களிப்பை குறித்து மாய்ந்து மாய்ந்து விவரிக்கிறார்.  அவர் ஒரு 'அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கர்' (எதையும் வித்யாசமாக யோசிப்பவர்) என்று அஜித் தோவலைப் புகழ்கிறார் 'கரன் கர்ப்' என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.