24 special

அஜித் குமார் வழக்கு.. ஐஏஎஸ் வரை கனெக்சன்.. நிகிதா பற்றி தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்! கோபாலபுரம் வரை தொடர்பா?

MKSTALIN,AJITHKUMAR
MKSTALIN,AJITHKUMAR

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதப்பட்டாலும், இங்கு பல காவல் நிலையங்கள் லாக்கப் மரணங்கள் மாடலில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதற்கு அண்மை சாட்சி, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் காவல் நிலையம். போலீஸார் அடித்தே சாகடிக்கும் அளவுக்கு திருபுவனத்தை அடுத்திருக்கும் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் காவலாளியாக இருந்த 27 வயது இளைஞர் அஜித்குமார் செய்த குற்றம்தான் என்ன? கோயிலுக்கு வந்த வயதான பெண்மணிக்குச் சக்கர நாற்காலி கொடுத்து உதவியதோடு, அவரைக் காரில் அழைத்துக்கொண்டு வந்த பேத்தி கேட்டுக்கொண்டதன் பேரில், அந்தப் பெண் ஓட்டிவந்த காரை பார்க் செய்ய உதவினார் என்பதுதான்.


`காரில் வைத்திருந்த பணத்தையும் பத்துப் பவுன் நகையையும் காணவில்லை' என்று அந்தப் பெண்கள் வாய்மொழியாகக் கொடுத்த புகாரை அடுத்து, விசாரணை என்ற பெயரில் போலீசார் சித்திரவதை செய்து அஜித்குமாரின் உயிரையே பறித்துவிட்டனர். இதில் கொடூரமான நகைமுரண் என்னவென்றால், அந்தப் பெண்கள் கோயிலுக்கு வருவதற்கு முன்பு ஒரு ஸ்கேன் சென்டருக்குச் சென்று அங்கே நகைகளைக் கழற்றி வைத்தவர்கள், அங்கிருந்து கிளம்பும்முன்பு நகைகள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்கவில்லை என்பதுதான்.

விசாரணை என்ற பெயரில் போலீஸ் சித்திரவதையால் உயிரிழக்கும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்கதையாக இருக்கின்றன. சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலீஸ் விசாரணையில் இறந்தபோது, அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த ஸ்டாலின் துடிதுடித்தார். ஆனால் இப்போதோ, இந்த வழக்கை மறைக்க 50 லட்சம் பேரம்  பேசப்பட்டுள்ளது தான் திராவிட மாடலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதற்காக அவசர அவசரமாக மறைக்க முற்பட்டார்கள் திமுக கொடியுடன் வந்த காரில் அஜித்குமாரின் குடும்பத்தை ஏற்றி சென்றது ஏன் என பலகேள்விகள் எழுந்துள்ளது. 

தி.மு.க அரசு பதவியேற்றதிலிருந்து கடந்த நான்காண்டுகளில் 24 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சென்ற ஆண்டு மட்டும் 300-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் கைகால்கள் முறிந்த நிலையில் காவல் நிலையத்திலிருந்து சிறைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ‘காவல் நிலையக் கழிவறைகளில் போலீஸார் வழுக்கி விழுந்து கைகால்களை உடைத்துக்கொள்வதில்லையே, ஏன்' என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில்கூட கோபமாகக் கேட்டது.

இதற்கிடையில்  சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞர் அஜித் குமார் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் நிகிதா என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் அவர் முக்கிய புள்ளியாகக் கருதப்படுகிறார்.

தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா,  மதுராபுரம் கோவிலுக்கு சென்றபோதுதான் நகை திருட்டு புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது. நிகிதாவிற்கும் அஜித்குமாரும் 100 ரூபாய் விவகாரத்தால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.   இதனால் கோபம் அடைந்த நிகிதா நகை காணவில்லை என்று பொய் வழக்கு போட்டதாகக் கூறப்படுகிறது.அவர் அளித்த புகாரின் பேரில், "இவரை விடாதீங்க.. கடுமையாக அடித்து உதைத்து விசாரிங்க" என்று சொல்லும் அளவிற்கு ஐஏஎஸ் மூலம் போலீசாருக்கு பிரஷர் போட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.யார் அந்த ஐஏஎஸ்  என தற்போது சமுக வலைதளைங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. 

பேராசிரியரான நிகிதா, 2011-ம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார்.மதுரையில் பதிவாகி உள்ள  இந்த FIR நகலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.இந்த FIR-ல் “2010-ம் ஆண்டு அப்போது துணை முதல்வராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் தமக்கு உறவினர் என்றும் அவர் மூலமாக தம்மால் எது வேணாலும் செய்ய முடியும் என கூறியுள்ளார்.