
திறமைக்கும் உழைப்புக்கும் எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய பாஜக அரசு, இந்தியாவின் மிக உயரிய, நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் உச்சபட்ச பதவிகளில் தமிழர்களை அமரவைத்து அழகு பார்த்து வருகிறது என்ற உண்மையை இன்றைய ‘ரீல்ஸ்’ மற்றும் சமூக ஊடக மோகத்தில் மூழ்கியிருக்கும் தமிழக இளைய தலைமுறை (Gen Z) ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெறும் 15 வினாடி வீடியோக்களையும், அரசியல் மேடை கவர்ச்சிப் பேச்சுகளையும் பார்த்துவிட்டு வாக்குகளைத் தீர்மானிக்கும் இன்றைய தலைமுறைக்கு, டெல்லி அதிகார மையத்தின் உச்சத்தில் ஒலிக்கும் தமிழ் குரல்களின் பின்னணியில் இருக்கும் தேசப்பற்றும், தகுதிக்குக் கிடைத்த அங்கீகாரமும் புரிவதில்லை.
நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக நாடுகளையே வியக்க வைக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நாட்டின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசுத் துணைத் தலைவர் பதவி என டெல்லியின் முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் தமிழர்கள் வசம் உள்ளன. அந்த வரிசையில், இப்போது இந்திய ராணுவத்தின் மிக உயரிய பதவியான முப்படைகளின் தலைமைத் தளபதியாக (CDS) தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்ரமணியன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அனில் சவுகானின் பணி ஓய்வுக்குப் பின் இந்த இமயப் பொறுப்பு ஒரு தமிழரின் தோள்களுக்கு வந்திருப்பது தமிழகத்திற்குப் பெருமை.
இந்திய ராணுவத்தில் தமிழகத்திற்கு எப்போதும் பெரும் பாரம்பரியம் உண்டு. ஏற்கனவே ஜெனரல் கிருஷ்ணராவ், ஜெனரல் சுந்தர்ஜி, ஜெனரல் பத்மநாபன் எனப் பல புகழ்பெற்ற தளபதிகள் தமிழகத்தில் இருந்து சென்று தேச ராணுவத்தை வழிநடத்தினார்கள். அவர்கள் வரிசையில் இப்போது பெரும் இடம் பெற்றிருக்கும் ராஜா சுப்ரமணியன், அவர்களுக்கு துணையாக நிற்கிறது மோடி அரசு.
அவர் பொறுப்பேற்கும் இந்தத் தருணம், உலக அரங்கில் இந்தியாவின் ராணுவ பலம் உச்சத்தில் இருக்கும் காலகட்டமாகும். சிங்கப்பூரில் உலக ராணுவக் கருத்தரங்கம் நடக்கும் இந்த நேரத்தில், உலகின் வலுவான ராணுவங்களில் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் பீட் ஹெக்செத் ஒப்புக்கொண்டுள்ளார். வல்லரசு நாடான அமெரிக்க ராணுவமே மூன்று மாதங்களாக ஈரானில் போராடிக் கொண்டிருக்கும் சூழல் நிலவுகிறது. ஆனால், அணுசக்தி நாடான பாகிஸ்தானை இந்தியா வெறும் 88 மணி நேரத்தில் வெள்ளைக்கொடி தூக்க வைத்தது. இந்தியாவின் அசுர பலம் என்ன என்பதை அமெரிக்கா நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அதனால்தான் ஹெக்செத்தின் வார்த்தைகள் மிகச் சரியானவை. இத்தகைய பலம் பொருந்திய இந்திய ராணுவத்தை இனி ஒரு தமிழன் வழிநடத்தப் போகிறான் என்ற உண்மையை, வெற்று அரசியல் ரீல்ஸ்களைத் தாண்டி தமிழக இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
