
அமெரிக்கா விதித்த கடும் சுங்க வரிகளால் பல நாடுகள் பதற்றமடைந்தன. ஆனால் இந்தியா மட்டும் தலைகுனியவில்லை. மாறாக, அந்தச் சவாலையே ஒரு வாய்ப்பாக மாற்றி, உலக பொருளாதார மேடையில் தன்னைத்தான் வலிமையாக நிறுத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு விதித்த 50 சதவீத இறக்குமதி வரி, இந்தியாவின் ஏற்றுமதி துறைக்கு ஒரு அதிர்ச்சி. குறிப்பாக துணிநூல், நகை, கடல் உணவு, தோல் பொருட்கள் போன்ற தொழிலாளர் சார்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த சில மாதங்களில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 37 சதவீதத்திற்கும் மேல் குறைந்தது. இதனால் மே 2025-ல் 8.8 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகம், செப்டம்பருக்குள் 5.5 பில்லியன் டாலராக சரிந்தது. அமெரிக்காவின் வரிவிதிப்பு எதிரொலி ஒரு சில மாதங்கள் மட்டுமே இருந்தது.
அமெரிக்கா விதித்த சுங்க வரி தாக்கத்திலிருந்து மீள இந்தியா பல துறைகளில் முயற்சிகளை எடுத்தது. அதன் பலனாக செப்டம்பர் 2025-ல் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 6.7 சதவீதம் உயர்ந்தது. மின்னணு பொருட்கள், பொறியியல் சாதனங்கள், கடல் உணவுப் பொருட்கள் போன்றவை சிறப்பாக வளர்ந்தன. குறிப்பாக மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 50 சதவீதம் வரை அதிகரித்தது என்பது பெருமைக்குரியது.
அதேபோல் கடல் உணவுப் பொருட்கள் 23 சதவீதம், அரிசி 33 சதவீதம், நகைகள் 0.4 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளன. சில தொழிலாளர் சார்ந்த துறைகள் — குறிப்பாக ரெடிமேட் துணி மற்றும் கைத்தறி பொருட்கள் — இன்னும் சவால்களைச் சந்தித்தாலும், இந்தியா முழுமையாக முன்னேற்றப் பாதையில் உள்ளது.
இந்தியாவின் பல்துறை ஏற்றுமதி திட்டங்கள் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, வியட்நாம், மெக்சிகோ, ரஷ்யா, நைஜீரியா, கனடா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 24 நாடுகளில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளன. இந்நாடுகள் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 59 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.
தற்போது இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 220 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இறக்குமதி 375 பில்லியன் டாலராகவும் உள்ளது. இதனால் வணிக பற்றாக்குறை 155 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாலும், அதனை சமநிலைப்படுத்தும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இந்தியா 2026 நிதியாண்டில் 6.6 சதவீத வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலையிலும், இந்தியா தனது உள்நாட்டு வலிமையால் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது. பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்: அமெரிக்காவின் கடும் சுங்க வரிகள் நீண்டகாலமாக நீடித்தால், இந்தியா மேலும் சவால்களைச் சந்திக்கலாம். ஆனால் இந்தியா அவற்றை சமாளிக்கும் வலிமையைக் கொண்ட நாடு. கல்வி, லாஜிஸ்டிக்ஸ், தரச் சான்றிதழ் போன்ற துறைகளில் மேம்பாடு தேவைப்படுகிறதென்பதை அரசு உணர்ந்து செயல்படுகிறது.
எதிர்ப்பை வாய்ப்பாக மாற்றும் இந்தியாவின் உறுதியான முயற்சி, காலப்போக்கில் உலகத்தரமான, பல்துறை ஏற்றுமதி அமைப்பை உருவாக்கும் என நம்பப்படுகிறது. இந்தியாவின் உறுதி, அதன் பொருளாதார வலிமையை உலகம் மேலும் ஒருமுறை உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.
இது ஒருபுறம் இருந்தாலும் அமெரிக்க இந்தியா போன்ற பெரிய சந்தையை இழக்க விரும்பவில்லை. குறிப்பாக சீனாவுடன் வரி போர் ஏற்ப்பட்டுள்ளதால் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது அமெரிக்கா அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை 50 சதவீதத்தில் இருந்து 15 முதல் 16 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்க டிரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இந்தியா-அமெரிக்கா இடையேயான நீண்ட காலம் நிறைவடையாமல் உள்ள வர்த்தக ஒப்பந்தம் ஒரு முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.
