
இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய சகாப்தம் பிறந்துள்ளது. அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற, சக்திவாய்ந்த 'டொமாஹாக்'ஏவுகணைக்கு இணையாக, முழுக்க முழுக்க 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீண்ட தூர நிலத்தடி தாக்குதல் குரூஸ் ஏவுகணையின் முதல் சோதனையை ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புவெற்றிகரமாக நடத்தியுள்ளது. முப்படைகளையும் நவீனமயமாக்கி வரும் மத்திய அரசு, பட்ஜெட்டை உயர்த்தி உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பை தீவிரப்படுத்தியதன் விளைவாக இந்த 'லாங்க் ரேஞ்ச் லேண்ட் அட்டாக் குரூஸ் ஏவுகணை' உருவெடுத்துள்ளது.
இந்த ஏவுகணையின் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் முதல் சோதனையிலேயே மிகச் சிறப்பாக இருந்ததாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. ராணுவ ரகசியம் காக்கப்பட்டு வந்தாலும், இந்த ஏவுகணை 'நிர்பய்' திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்பதும், பெங்களூருவின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாபிலிஷ்மென்ட் மூலம் வடிவமைக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகள் சில கூடுதல் சோதனைகளுக்குப் பிறகு இது அதிகாரப்பூர்வமாக ராணுவத்தில் சேர்க்கப்படும்.
இந்த ஏவுகணையின் வருகை சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக மாறியுள்ளது. சுமார் 1,000 முதல் 1,500 கிமீ வரையிலான இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை மூலம், இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருந்துகொண்டே பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம், லாகூர், பைசலாபாத் மற்றும் அதன் பொருளாதார மையமான கராச்சி கடற்படை தளம் வரை துவம்சம் செய்ய முடியும். அதேபோல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் இதை நிலைநிறுத்தினால், சீனாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள முக்கிய ராணுவ மையங்களான லாசா, செங்டு, உரும்கி மற்றும் குன்மிங் போன்ற நகரங்களை எளிதாகக் குறிவைத்து அழிக்க முடியும்.
இந்த எல்ஆர்எல்ஏசிஎம் ஏவுகணையை தரை, போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் என எதிலிருந்து வேண்டுமானாலும் ஏவ முடியும் என்பதுடன், இது அணுஆயுதங்களையும் சுமந்து செல்லும் வல்லமை பெற்றது. பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலன்றி, இது பூமிக்கு மிகக் குறைந்த உயரத்தில் பறந்து செல்லும் என்பதால், எதிரி நாடுகளின் ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இதனைக் கண்டறிவது மிகக் கடினம்.
அமெரிக்க ராணுவத்தின் முதுகெலும்பாக விளங்கும் 'டொமாஹாக்' ஏவுகணை, 1991 'ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்' முதல் அண்மைய ஈரான் போர் வரை அமெரிக்காவின் அத்தனை ராணுவ வெற்றிகளுக்கும் காரணமாக இருந்த ஒன்றாகும். மணிக்கு 880 கிமீ வேகத்தில் சென்று, பறக்கும்போதே இலக்குகளை மாற்றும் அசாத்திய திறன் கொண்ட டொமாஹாக் ஏவுகணைக்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூட ஏங்கியதுண்டு. அப்படிப்பட்ட உலகத்தரம் வாய்ந்த ஆயுதத்திற்கு நிகராக, இந்தியாவின் கைக்கு வந்துள்ள இந்த எல்ஆர்எல்ஏசிஎம் ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்புப் பலத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இனி இந்திய எல்லையில் சீனாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ வாலாட்ட தைரியம் இருக்காது என்பது மட்டும் உறுதி!
