திமுகவின் போக்கு பிடிக்காமல் இடதுசாரி கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன, வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக அரசு மாநில சுயாட்சி பேசியபடியே எங்களை ஏமாற்றி விட்டது என கம்யூனிஸ்டுகள் கொதிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது! குறிப்பாக தமிழகத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுகின்றார்கள், வட இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, தமிழர்களால் அவர்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள், தமிழர்கள் வேலைவாய்ப்பை வட இந்தியர்கள் பறித்துக்கொண்டார்கள் என்பது போன்ற வதந்திகள் பரவியது, இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் தமிழக அரசின் காவல்துறை தலையிட்டு வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் இங்கு வேலை பார்க்கும் வட இந்தியர்கள் பத்திரமாக உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றன.
வட இந்தியர்கள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பணியாற்றும் பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் அவர்கள் தாக்கப்பட்டதாக வந்த செய்திகள், வீடியோக்கள் போலியானவை என விளக்கம் அளித்தார். மேலும் தமிழக அரசு சார்பில் ஹிந்தியில் விளக்கமும் அளிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பீகார், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகள் தமிழகத்திற்கு பயணம் செய்து அவர்கள் மாநில மக்கள் இங்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை பார்வையிட்டு அவர்களது மாநிலத்திற்கு அறிக்கை அனுப்ப நிறைய பேர் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர்.
பீகார் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வந்து சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். அது மட்டுமல்லாத திமுக பொருளாளரும், அக்கட்சியின் லோக்சபா குழு தலைவருமான டி.ஆர்.பாலு பீகார் தலைநகர் பாட்னாவிற்கு சென்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி அளித்து விட்டு வந்தார்.
இப்படி எல்லாம் வட மாநில தொழிலாளர்கள் விஷயத்தில் திமுக நடவடிக்கை எடுத்து வரும் சமயம் கம்யூனிச கட்சிகள் தங்கள் எதிர்ப்பை காட்ட துவங்கியுள்ளன. இதுவரைக்கும் திமுக மாநில உரிமை மாநில சுயாட்சி எல்லாம் பேசிவிட்டு பீகார், ஜார்கண்ட் போன்ற மாநில அதிகாரிகள் குழுவை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய அனுமதித்தது கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளை அதிச்சியடைய அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் திமுக துணை பொதுச்சாளர்கள் ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டவரை தொடர்பு கொண்டு ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர் என தவகல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ வேல்முருகன், 'ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது தமிழக அரசின் சார்பில் குழு செல்லவில்லை ஆனால் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அதிகார குழு ஆய்வு செய்ய வந்திருப்பது தமிழக அரசை இழிவுபடுத்தும் செயல் என விமர்சித்துள்ளார். இப்படி நீங்களே மாநில சுயாட்சி, மாநில உரிமை என முழங்கி பேசிவிட்டு மற்ற மாநிலங்களை தமிழகத்திற்குள் அனுமதித்து ஆய்வு செய்ய விடலாமா? என ஆதங்கத்தில் இருக்கின்றனர்.
இதன் பின்னணியில் முன்பைப்போல பாஜகவை திமுக எதிர்ப்பதில்லை, தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்ற ரீதியில் திமுக செல்வதால் எங்களை கண்டுகொள்ளவில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுப்பில் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.