24 special

செல்வப்பெருந்தகை விவகாரத்தில் ராகுல் அதிரடி முடிவு! ஐடி ரைடும் ... ராகுலின் கடுப்பும்! காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்

RAHULGANDHI, SELVAPERUNTHAGAI
RAHULGANDHI, SELVAPERUNTHAGAI

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் தற்போது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விரிசலுக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது ராகுல் காந்தியின் மேடைப் பேச்சுகளைச் செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்த விதம் தான். ராகுல் காந்தி மிக ஆக்ரோஷமாகவும் உணர்ச்சிகரமாகவும் முன்வைக்கும் தேசிய அளவிலான அரசியலை, செல்வப்பெருந்தகை மொழிபெயர்க்கும் போது அதன் வீரியம் குறைவதாகவும், பல இடங்களில் ராகுல் சொல்ல வந்த கருத்தின் ஆழம் சிதைக்கப்படுவதாகவும் டெல்லி மேலிடத்திற்குப் புகார்கள் பறந்தன. 


குறிப்பாக, மொழிபெயர்ப்புத் தவற்றால் கட்சியின் கொள்கை விளக்கங்கள் மக்களிடம் சரியாகச் சென்றடையவில்லை என்பதில் ராகுல் காந்தி மிகுந்த வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனுடன் திமுகவுடனான கூட்டணி விவகாரமும் சேர்ந்து கொள்ள, நிலைமை இன்னும் மோசமானது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தொகுதிக் பங்கீட்டில் பிடிவாதம் காட்ட வேண்டும் என்று நினைத்தபோது, செல்வப்பெருந்தகை திமுகவின் நிலைப்பாட்டிற்கு இணக்கமாகச் சென்றது ராகுலுக்கு அவர் மீதான "கடுப்பை" அதிகப்படுத்தியது. 

இந்த அதிருப்தியின் உச்சகட்டமாகவே, கன்னியாகுமரியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் மிக முக்கியமான தேர்தல் பொதுக்கூட்டத்திற்குத் தமிழக மாநிலத் தலைவரான செல்வப்பெருந்தகைக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படவில்லை. ஒரு மாநிலத் தலைவர் கலந்துகொள்ளாமல் அந்த மாநிலத்திலேயே ராகுல் காந்தி கூட்டத்தை நடத்தியது, அவர் செல்வப்பெருந்தகையை முழுமையாக ஒதுக்கி வைக்க முடிவு செய்துவிட்டார் என்பதற்கான வலுவான தரவாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

இந்த அவமானத்தைத் தாள முடியாமலும், ராகுல் காந்தியின் கோபத்திலிருந்து தப்பிக்கவும் தான், வருமான வரித்துறை சோதனை என்ற ஒரு புதிய நாடகத்தை அவர் அரங்கேற்றியதாகப் பலமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. "ஐடி அதிகாரிகள் என் வீட்டிற்குள் புகுந்துவிட்டார்கள், அதனால் தான் என்னால் ராகுல் பிரசாரத்திற்கு வர முடியவில்லை" என்று அவர் சொன்ன காரணத்தை வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக மறுத்தது அவருக்குப் பேரிடியாக அமைந்தது. இது ஒருபுறமிருக்க, முன்னாள் தலைவர்களான திருநாவுக்கரசர் மற்றும் கே.எஸ்.அழகிரி ஆகியோரிடம் கே.சி.வேணுகோபால் நடத்திய ரகசிய விசாரணை, செல்வப்பெருந்தகையின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. ராகுல் காந்தியின் இந்த அதீத அதிருப்தியும், அடுத்தடுத்து அம்பலமாகும் பொய்ப் புகார்களும் சேர்ந்து, சட்டசபைத் தேர்தல் முடிந்த கையோடு செல்வப்பெருந்தகை மாற்றப்படுவதைத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டன.