24 special

முருகன் கோவில் இடிப்பு… சர்ச்க்கு பாதுகாப்பா? - திமுக அரசின் முகத்திரை கிழிந்தது! விஸ்வரூபம் எடுத்த விஷயம்

MKSTALIN,SEKARBABU
MKSTALIN,SEKARBABU

பெருமாநல்லூர் அருகே பழமையான முருகன் திருக்கோவிலை திமுக அரசு இடித்த சம்பவம், தமிழகம் முழுவதும் இந்து மக்களிடையே அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த குலதெய்வ ஆலயத்தை, காவல்துறையைக் குவித்து, எதிர்ப்புகளை அடக்கி, திட்டமிட்டு இடித்த செயல்  இது நிர்வாக நடவடிக்கையா, அல்லது இந்து மதத்துக்கு எதிரான பழிவாங்கல் அரசியலா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபட்டி அறிவொளி நகர் பகுதியில், குமரன்குன்று என்ற பெயரில் அமைந்திருந்த செல்வ முத்துக்குமரன் திருக்கோவில், முருகன், விநாயகர், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சந்நிதிகளுடன் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. இது சாதாரண கட்டிடம் அல்ல. அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டின் மையமாகவும், திருப்பூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் ஆன்மீக தொடர்புடையதாகவும் இருந்த ஒரு பழமையான ஆலயம்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன், இந்த ஆலயத்தை திமுக அரசு இன்று முற்றிலுமாக இடித்துள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவால் எரியும் ஆத்திரத்தை, நிரபராத இந்து பக்தர்களின் வழிபாட்டு தலத்தின் மீது காட்டுவது தான் சமூகநீதியா?

திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இந்து கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க வக்கற்ற அரசாக இருக்கும் திமுக, பொதுமக்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த கோவில்களை மட்டும் குறிவைத்து தொடர்ந்து இடித்து வருவது யாரை திருப்திப்படுத்த? எந்த சக்திகளுக்கு அடிபணிந்து இந்து மத விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன? என்ற கேள்விகள் இன்று தமிழகமெங்கும் எதிரொலிக்கின்றன.

இதே திமுக அரசு, குரோம்பேட்டை – அஸ்தினாபுரம் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட சர்ச் கட்டடத்தை இடிக்காமல், இரு ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறது என்பதே இந்த இரட்டை வேடத்தின் உச்சமாகும். தாம்பரம் மாநகராட்சி, அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலை, அண்ணா நகரில் உள்ள அந்த சர்ச், அனுமதியின்றி கட்டப்பட்டது என தனிநபர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 2023 மார்ச் மாதமே இடிக்க உத்தரவிட்டது. நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, 2025 டிசம்பர் 5க்குள் சர்ச் இடிக்க வேண்டும், தவறினால் டிசம்பர் 8ம் தேதி சிஎம்டிஏ உறுப்பினர் செயலரும், தாம்பரம் மாநகராட்சி கமிஷனரும் நேரில் ஆஜராக வேண்டும் என கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரங்கள், பணியாளர்கள், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் சென்றபோதும், 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால், “பதற்றம்” என்ற பெயரில் அதிகாரிகள் மீண்டும் பின்வாங்கினர். இதே நாடகம் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவும், சட்டமும், நிர்வாக அதிகாரமும் — அனைத்தும் ஒரு மதத்திற்கு வந்தால் நின்று விடுகிறது.

ஆனால் இந்து கோவில்கள் என்றால்? ஆர்டர் வந்தவுடன் உடனடி இடிப்பு. எதிர்த்து பேசினால் அடக்குமுறை. போராடினால் கைது. இதுவா திராவிட மாடல் சமூகநீதி? இதுவா சமத்துவ ஆட்சி?

ஒரு பக்கம் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சட்டம் கண் மூடிக்கொண்டு நிற்கிறது. மறுபக்கம், பழமையான இந்து ஆலயங்களுக்கு மட்டும் இரும்புக் கரம். இந்த திமுக அரசின் இந்து மத விரோத, தரங்கெட்ட, தேர்ந்தெடுத்த இலக்குகளைக் குறிவைக்கும் நடவடிக்கைகளை இந்து மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இது நிர்வாகம் அல்ல — இது திட்டமிட்ட தாக்குதல்.