24 special

எங்கே ரூ.10.62 லட்சம் கோடி! திடீர் திருப்பம்! வெளிநாடு சென்றது இதுக்குத்தானா! காத்திருந்த திமுக பெரும் ஷாக்

MKSTALIN,T.R.B.RAJAA
MKSTALIN,T.R.B.RAJAA

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், மார்ச் 24, 2022-ல் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட துபாய் பயணம், பரபரப்பாகப் பேசப்பட்டது. தனி விமானத்தில் தன் குடும்பத்தினருடன் துபாய்க்குப் பறந்த முதல்வர், துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டு ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, லூலூ குரூப், நோபல் ஸ்டீல், ஷராஃப் குரூப், வொயிட் ஹவுஸ் டெக்ஸ்டைல்ஸ், ட்ரான்ஸ் வேர்ல்டு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன், 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. “அதன் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப்போகிறது... பிரமாண்ட துபாய் போலவே, எனது பயணமும் பிரமாண்டமாக அமைந்தது...” என்று பெருமை பொங்கப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.


அவர் துபாய்க்குச் சென்று வந்து, கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போது வரையில், எவ்வளவு முதலீடுகள் வந்தன என்பது பற்றித் தகவல் இல்லை. முதல்வர் துபாய்க்குச் சென்ற சமயத்தில், புர்ஜ் கலீஃபா டவரில் காணொளி வெளியிடப்பட்டது. அதற்காக மட்டுமே சுமார் 50 லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தனர். முதல்வருடன் அவருடைய குடும்பத்தினர் பயணமானதும் பெருத்த சர்ச்சையானது. 

முதல் கோணல், முற்றிலும் கோணல்’ என்பதுபோல ஆகிவிட்டது முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள். அவரது துபாய் பயணம் குறித்த விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பலரால் கேட்கப்பட்டும், இதுவரை வழங்கப்படவில்லை.

தி.மு.க ஆட்சியமைத்து ஐந்து ஆண்டுகள் நெருங்கப்போகின்றன. இதுவரையில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதுவரை தமிழகத்துக்கு 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கின்றன. 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உறுதிசெய்திருக்கிறோம்” என்று புளகாங்கிதம் அடைந்தார். தொழில்துறை அமைச்சரான டி.ஆர்.பி.ராஜா ஒரு படி மேலே போய், “முதலீடுகளில், 70 சதவிகிதம் அளவுக்குச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டோம்...” என்று மார்தட்டிக்கொண்டார்.

‘ஏராளமான முதலீடுகள், ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்புகள், சாதனைகள்...’ என்று தி.மு.க அரசு விளம்பரப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு, முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை, வேலைவாய்ப்புகளுக்கான அறிகுறியும் தென்படவில்லை. இது குறித்து எதிர்க்கட்சிகள் பலமுறை கேள்வி எழுப்பியும்கூட, உருப்படியான எந்தவொரு பதிலும் அரசிடமிருந்து வரவில்லை. சமீபத்தில், ‘ஃபாக்ஸ்கான்’ முதலீடு தொடர்பாகச் சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடந்தபோது, ‘அது வேறு ஃபாக்ஸ்கான். இது வேறு ஃபாக்ஸ்கான்...’ என்று எதை எதையோ உருட்டிச் சமாளித்தார் டி.ஆர்.பி.ராஜா. 

முதல்வரின் துபாய் பயணத்தின் தகவல்களைக் கேட்டு ஆண்டுக்கணக்கில் போராடிவரும் ஆர்.டி.ஐ ஆர்வலர் காசி மாயன் பேசுகையில், “துபாய் பயணத்துக்குக் கட்சி நிதியிலிருந்து செலவு செய்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லியிருந்தார். அது உண்மைதானா என்பதை அறிய, ஆர்.டி.ஐ-யில் தகவல் கோரினேன். தகவல் ஆணையமே உத்தரவு பிறப்பித்துவிட்ட நிலையிலும், இதுவரை தகவல் கொடுக்கப் படவில்லை. மடியில் கனமில்லை என்றால், இவர்களுக்குத் தகவலைக் கொடுக்க பயம் எதற்கு...” என்றார் ஆதங்கமாக.

“முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுக்குச் செல்லவில்லை. ஊழல் பணத்தைத் தொழிலில் முதலீடு செய்யவே அவர் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார்...” என்று எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. அவர்களின் குற்றச்சாட்டுகளை உடைக்கும்விதமாக, “இதுதான் நீங்கள் கேட்ட முதலீட்டு விவரங்கள்... எத்தனை தொழிற்சாலைகளைத் தொடங்கி, எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம் பாருங்கள். இதுதான் திராவிட மாடல் அரசு...” என்று புள்ளிவிவரங்களை எடுத்துப்போட, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவால் முடியவில்லை. 

நமக்கு மட்டுமல்ல... எதிர்க்கட்சிகளுக்கும், சாமானிய பொதுமக்களுக்கும் எழும் அடிப்படைக் கேள்வி இதுதான்... “10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, அதன் மூலமாக 32.81 லட்சம் பேருக்கு வேலை...” என்று சொன்னீர்களே, அது நடந்திருந்தால்... அவற்றைப் புள்ளிவிவரங்களுடன் வெளியிடுவதில் என்ன பிரச்னை... முதல்வரின் துபாய் பயணம் குறித்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஆர்.டி.ஐ-யில் தகவல் கோரியும், இதுவரை அதை வழங்காதது ஏன்... அ.தி.மு.க-வின் முதலீட்டு விவரங்களையெல்லாம் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்கூட மனப்பாடமாக ஒப்பிக்கும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க அரசின் முதலீட்டு விவரங்களைச் சொல்ல மறுப்பதன் மர்மம் என்ன... முதலீடுகள் உண்மையிலேயே வந்தனவா... இல்லையா?

மக்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும் அமைச்சரே... சொல்வீர்களா?