தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் H. ராஜா நேரடியாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறார், நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒரு நபரை தமிழக முதல்வர் கட்டி அனைத்து வரவேற்று இருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்தார். அப்போது பேரறிவாளனைக் கட்டியணைத்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இது குறித்து H. ராஜா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "11-05-1999 அன்று உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் செய்த குற்றங்களை பட்டியலிட்டு தண்டனை வழங்கியது. ஆனால் இன்று பேரறிவாளன் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதை போல முதல்வர், பேரறிவாளனை அழைத்து கட்டியணைத்து குற்றத்திற்கு ஊக்கமளிக்கின்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது தமிழகத்தில் அரசியல் வன்முறையை மேலும் வளர்க்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார் H. ராஜா இதற்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
பாஜகவை பொறுத்தவரை 7 பேரும் குற்றவாளிகள்தான். உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து சில காரணங்களால் விடுதலை செய்திருக்கிறதே தவிர, அவர்கள் கொண்டாடப்படக்கூடியவர்கள் அல்ல. வரலாற்றில் திமுக தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைத்திருக்கிறது.
அவர்களை கொண்டாடி வருங்கால தலைமுறையினருக்கு தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது.7 பேர் விடுதலைக்கு அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றினாலும், விடுதலையான பிறகு அவரை அதிமுகவினர் யாரும் ஆரத்தழுவி, கட்டியணைத்து, முத்தமிட்டு கொண்டாடவில்லை.
இந்த தீர்ப்பின்படி, சிறையில் பேரறிவாளனின் நடத்தை, 2 முறை பரோலில் வந்த பிறகு அவரது நடத்தை, எந்த புகாருக்கும் இடமின்றி இருந்தது போன்ற காரணங்களால்தான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனவே, இத்தீர்ப்பு மற்ற 6 பேருக்கு பொருந்தாது” என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.