
தமிழக காங்கிரஸ் கட்சியில், சமீபகாலமாக கூட்டணி ஆட்சி கோஷம் அதிகரித்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதியை பெற வேண்டும் ஆட்சியில் அதிகாரம் பெற வேண்டும் என தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன
அதுமட்டுமில்லை கரூர் துயரத்துக்குப் பின்னர் விஜய் இன்னும் வீட்டைவிட்டுக்கூட வெளியே வரவில்லை. ஆனால், அவரை கூட்டணிக்குள் கொண்டுவர காங்கிரசும் காய் நகர்த்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. மற்றொரு பக்கம் ராகுல் காந்தியுடன் விஜய்க்கு நல்ல நட்பும் தொடக்கம் முதலே உள்ளது. இதனைத் தொடர்ந்தே கரூர் துயர் குறித்து உடனே விஜய்க்கு போன் போட்டு விசாரித்தார் ராகுல்.
தவெக தரப்பில் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரோடு பேசப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்ட தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி உள்ளிட்ட ஆஃபர்கள் கொடுக்க விஜய் தயாராக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்தே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சில ‘தவெகவோடு கூட்டணி வைப்பது ஒன்றும் பாவமில்லையே’ என பொடிவைத்து பேச ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி குறித்து அமைச்சர் பெரியசாமி கருத்தை, 'குப்பை' என கார்த்தி எம்.பி., விமர்சித்துள்ளார்.திருமண விழாவில் அமைச்சர் பெரியசாமி பேசுகையில், ''மேடையில் ஜோதிமணி இருக்கிறார். ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர்கள், பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு தான் வருவர். ஆனால், தி.மு.க.,வை பொறுத்தவரை, சாமானியர்களை உயர்த்தி பிடித்து, அவர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய கட்சி. அதை சொல்வதற்காகவே காங்கிரசோடு ஒப்பிட்டு பேசுகிறேன்,'' என்றார்.
அமைச்சரின் பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி, தன் சமூக வலைதள பக்கத்தில், 'பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிக்கே காங்கிரஸ் தலைவர்கள் வருவர் என்ற அமைச்சர் பெரியசாமியின் கருத்து ஒரு குப்பை' என குறிப்பிட்டுள்ளார்.அவரது கருத்தை ஆதரித்தும், பெரியசாமி மற்றும் ஜோதிமணியை விமர்சித்தும், காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.மேடையில் ஜோதிமணி, அக்கருத்தை எதிர்க்காதது ஏன் எனகேட்டுகடுமையாக காங்கிரசார் விமர்சிக்கின்றனர்.
இப்படி முட்டல் மோதல் தொடங்கி உள்ள நிலையில் விஜயுடன் காங்கிரஸ் நெருங்குவது திமுகவுக்கு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது தவெகவோடு கூட்டணி வைத்தால் அது தமிழகம் மட்டுமின்றி விஜய் செல்வாக்கு செலுத்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரியிலும் காங்கிரஸுக்கு பலமாக மாறும் என அக்கட்சியின் தலைவர்கள் சிலர் கணக்கு போடுகின்றனர்.
அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு கணிசமான எம்.பிக்கள் உள்ளனர். 2026 ல் திமுக தோற்றால் அடுத்து டெல்லியிலும் திமுகவின் லாபி செல்லாது என்பதால் திமுகவின் உறவை முறித்துக்கொள்ளலாம் அல்லது . தொகுதி பேரத்தை காங்கிரஸ் அதிகரிக்க திட்டமிடும்.
இதற்கிடையில் திமுக தற்போது காங்கிரஸ் எங்களுடன் தான் இருக்கிறது என்பதை மேடை தோறும் பேச ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக உதயநிதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்றைக்கும் 'கை' நம்மைவிட்டு போகாது. நான் என் கையையும், உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் சொன்னேன்" என்று கூறினார். கை' நம்மைவிட்டு போகாது என்று கூறியதன் மூலம் சூசகமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி பலத்தை துணை முதல்வர் உதயநிதி உறுதிசெய்தார்.மேலும் விஜயிடம் ராகுல் பேசியபோது ஸ்டாலினிடம் கேட்டு தான் பேசினார் என கூறினார்கள். தற்போது கூட்டணிக்காக திமுக பலவற்றை தியாகம் செய்ய தயாராகி வருகிறது.