24 special

திரிஷாவிற்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு அதிகார ஆட்டம் ஆரம்பமா ஜனநாயகமா அல்லது சினிமா கவர்ச்சியின் பிடியா

VIJAY,TRISHA
VIJAY,TRISHA

தமிழக முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷாவுக்கு அளிக்கப்பட்ட அதீத முக்கியத்துவம், ஜனநாயகத்தின் விழுமியங்களை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்கும் விழா என்பது அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பும் ஏற்கும் மிக உயரிய அரசு நிகழ்வு. அத்தகைய நிகழ்வில், எந்தவொரு அரசுப் பதவியிலோ அல்லது மக்கள் பிரதிநிதியாகவோ இல்லாத ஒரு சினிமா நடிகைக்கு, அரசு எந்திரம் 'ரெட் கார்பெட்' வரவேற்பு அளித்திருப்பது அதிகார த்தின்  உச்சம். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் காவல்துறை வாகனங்கள், ஒரு நடிகையின் காருக்கு பின்னால் 'கான்வாய்' ஆக அணிவகுத்துச் சென்றது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற கோட்பாட்டையே குழிதோண்டிப் புதைத்துள்ளது.


அரசியல் ரீதியாகப் பார்த்தால், இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விஜய்யின் குடும்பத்தினருக்கு இணையாக முன்வரிசையில் அமரவைக்கப்பட்டது முதல், விழா முடிந்தபின் காவல்துறை பாதுகாப்புடன் வழிநடத்தப்பட்டது வரை அனைத்தும் திட்டமிடப்பட்ட ஒரு "பவர் ஷோ" (Power Show) போலவே காட்சியளிக்கிறது. அமைச்சர்களுக்கும் மூத்த தலைவர்களுக்கும் கிடைக்க வேண்டிய அந்த அரசுப் பாதுகாப்பை, ஒரு தனிப்பட்ட நபருக்கு தாரை வார்த்துக் கொடுத்தது யாரை திருப்திப்படுத்துவதற்காக? இது ஒரு அரசு விழாவா அல்லது ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளமா என்ற கேள்வி எழுகிறது. சினிமாவின் கவர்ச்சியை முதலீடாக வைத்து அரசியலுக்கு வரும் போக்கு தமிழகத்திற்குப் புதிதல்ல என்றாலும், பதவிக்கு வந்த முதல் நாளிலேயே அரசு அதிகாரத்தை ஒரு நடிகையின் தனிப்பட்ட வசதிக்காகத் திருப்பி விடுவது, "புதிய அரசியல்" என்று முழங்கியவர்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியுள்ளது.

திரிஷாவின் நெகிழ்ச்சியான தருணங்களை ஊடகங்கள் கொண்டாடுவது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அதிகாரத்தின் அணுக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நீதி, சாமானிய மக்களுக்கு ஒரு நீதி என்பதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது. சாலையோரம் வெயிலில் நின்று தன் தலைவனைக் காணத் துடித்த லட்சக்கணக்கான தொண்டர்களை விட, ஒரு நடிகையின் பாதுகாப்பிற்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்தது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சினிமாத்தனமான பிம்பங்களை அரசியலில் திணிப்பது, தீவிரமான கொள்கை விவாதங்களை நீர்த்துப்போகச் செய்து, அரசியலை மீண்டும் ஒரு கிளாமர் உலகமாக மாற்றும் ஆபத்தையே விளைவிக்கும். ஒரு முதல்வர் தன் அதிகாரத்தை மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, திரைத்துறை நண்பர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப் பயன்படுத்தக் கூடாது என்பதே நிதர்சனம்.