
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியவுடன், நாடு முழுவதும் பா.ஜ.,-எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 1,654 வரை உயர்ந்தது. இது ஒரு மாநில வெற்றியால் மட்டும் ஏற்பட்ட எண்ணிக்கை உயர்வு அல்ல; கடந்த 10–12 ஆண்டுகளில் பா.ஜ., உருவாக்கிய தேசிய உணர்வு, வளர்ச்சி, நிர்வாக உறுதி ஆகியவற்றின் தொடர்ச்சியான விளைவு.
1951ல் ஜனசங்கமாக தொடங்கிய இந்த அரசியல் பயணம், 1980ல் பா.ஜ.க என்ற பெயரில் புதிய திசைபெற்றது. ஒருகாலத்தில் சில எம்.பி.,க்கள், சில எம்.எல்.ஏ.,க்களைப் பெற்றால் கூட ‘நாங்கள் வளர்கிறோம்’ என்று கொண்டாடிய அந்தக் கட்சி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய தேசிய சக்தியாக இருப்பது சாதாரண வளர்ச்சி அல்ல. இது மக்கள் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தையும் காட்டுகிறது.
இந்த மாற்றத்திற்கு காரணமாகச் சொல்லப்படுவது மோடி தலைமையின் மீதான நம்பிக்கை மற்றும் தேசிய முன்னேற்றத்தின் மீது மக்களின் விருப்பம்.2014ல் மோடி தலைமையிலான அரசு அமைந்தபின் இந்திய அரசியல் வளர்ச்சி இரட்டிப்பு வேகமெடுத்தது. சாலைகள், ரயில்கள், நதி இணைப்பு, மின்சாரம், ஆயுஷ்மான், உஜ்வலா, குடியிருப்பு, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் கிராமம் முதல் மாநகரம் வரை மக்களை நேரடியாகத் தொட்டன. பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், பொருளாதார ஒழுங்கு, ஊழலை கட்டுப்படுத்துதல் போன்ற துறைகளில் வலுவான நடவடிக்கைகள் மக்கள் நம்பிக்கையை அதிகரித்தன.
இந்த நம்பிக்கையே தேர்தல் வெற்றிகளாக மாறியது.2014, 2019, 2024 — மூன்று லோக்சபா தேர்தல்களிலும் தெளிவான வெற்றி.
தற்போது லோக்சபா 240, ராஜ்யசபா 103 என மொத்தம் 343 எம்.பி.,க்களுடன் பா.ஜ., பாராளுமன்றத்திலும் மிகப்பெரிய சக்தியாக உள்ளது. ஒருகாலத்தில் முழுநாட்டையும் ஆண்ட காங்கிரஸ் இன்று மொத்தம் 126 எம்.பி.,களில் அடங்கியுள்ளது என்பதும் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தைத் தெளிவாக காட்டுகிறது.
உத்தரபிரதேசம் 258, எம்.எல்.ஏ.க்கள் மத்தியப் பிரதேசம் 165, எம்.எல்.ஏ.க்கள்குஜராத் 162, எம்.எல்.ஏ.க்கள் மஹாராஷ்டிரா 131, எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் 118 எம்.எல்.ஏ.க்கள் எங்கு பார்த்தாலும் பா.ஜ., ஆட்சியோ அல்லது பா.ஜ., கூட்டணி அரசு தான் அமைந்துள்ளது. மோடி அரசு முதன்முதலில் வந்தபோது பா.ஜ. எம்.எல்.ஏ.,க்கள் 1,035 இருந்தனர். 2016க்கு பிறகு அதிரடி வளர்ச்சி அரசியலின் தாக்கம் தெளிவாகத் தோன்ற ஆரம்பித்தது. 2023ல் 1,441, எம்.எல்.ஏ க்கள் 2024ல் 1,588,எம்.எல்.ஏ க்கள் இப்போது பீஹார் வெற்றியுடன் 1,654 என புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
11 ஆண்டுகளில் 619 எம்.எல்.ஏ.,க்களை அதிகரித்துள்ளது என்பது இந்திய அரசியலில் மிகப்பெரிய முன்னேற்றம்.பீஹார் தேர்தலில் பா.ஜ.க தனது கூட்டணியுடன் அபார வெற்றி பெற்றது. 101 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 89 இடங்களில் ஜெயித்து தனிப்பெரும் கட்சியாக மாறியது. பீஹாரின் மக்கள், “வளர்ச்சி நிற்கக் கூடாது, ஆட்சி தொடர வேண்டும்” என்ற முடிவைத் தந்துள்ளனர்.
இந்த நிலைமை இன்று ஒரு பெரிய செய்தியைச் சொல்கிறது
இந்தியாவில் தேசிய உணர்வு அதிகரித்திருக்கிறது. வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
எண்களிலும், ஆட்சித் திறனிலும், மக்கள் ஆதரவில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கும் பா.ஜ., உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும் உள்ளது.ஒரு வரியில் சொல்லப்போனால்மோடி தலைமையால் வந்த தேசிய முன்னேற்றத்தின் பாதையை மக்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் பா.ஜ.,க எந்த வித தடையின்றி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
