
காஷ்மீரின் பனிமலைகளில் ஒலித்த துப்பாக்கிச் சத்தம் இன்று தேனி மண்ணில் பெருமையின் முழக்கமாக எதிரொலிக்கிறது. காமயகவுண்டன்பட்டியின் வீரமகன் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், இந்தியத் தாயின் பாதுகாப்பிற்காக உயிரையே பணயம் வைத்து போராடியதற்காக நாட்டின் உயரிய வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ராவை பெற்றுள்ளார். இது ஒரு விருது மட்டுமல்ல; ஒரு தமிழனின் வீரத்திற்கும், ஒரு இந்திய ராணுவ வீரனின் தியாகத்திற்கும் கிடைத்த தேசிய அங்கீகாரம்.
கடந்த 2024 டிசம்பர் மாதம் ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் அதிரடி வேட்டையில் இறங்கியது. உயிருக்கு ஆபத்து நிறைந்த அந்த நடவடிக்கையில் முன்னணியில் இருந்தவர் மீனாட்சி சுந்தரம். அதிகாலை இருளில் தொடங்கிய துப்பாக்கிச் சண்டையில் அவர் அபார துணிச்சலுடன் எதிரிகளை எதிர்கொண்டார். முதலில் ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய அவர் மீது எதிரிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். வெறும் சில மீட்டர் தூரத்தில் இருந்து பாய்ந்த குண்டுகள் அவரது முகத்தாடையையும் தோள்பட்டையையும் கிழித்தன. ரத்தம் வெள்ளமாக கொட்டிய நிலையிலும் அவர் பின்வாங்கவில்லை. உயிரைக் காக்க அல்ல, நாட்டைக் காக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் தொடர்ந்து போராடினார்.
கடும் காயங்களால் துடித்தபடியே தனது சக வீரர்களுடன் இணைந்து ஐந்து பயங்கரவாதிகளையும் முற்றிலுமாக ஒழித்தார். எதிரிகளை வீழ்த்திய பின்னரே அவர் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு பல கட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால் அவரது உடலில் ஏற்பட்ட காயங்களை விட, அவரது வீரச் செயல் இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தது.
இந்த அபார தைரியம், அசைக்க முடியாத மனஉறுதி மற்றும் தன்னலமற்ற தேசப்பற்றை பாராட்டி இந்திய குடியரசுத் தலைவர் அவருக்கு கீர்த்தி சக்ரா விருதை வழங்கி கவுரவித்தார். நாட்டின் தலைநகரில் விருதை பெற்ற அந்த வீரன், சொந்த மண்ணிற்கு திரும்பியபோது காமயகவுண்டன்பட்டி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேனி மாவட்டமே திருவிழா கொண்டாடியது. மலர் தூவி, மேளதாளங்கள் முழங்க, தேசியக் கொடிகளை ஏந்தி ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த இளைஞன், இன்று இந்தியாவின் வீரமகனாக உயர்ந்திருப்பது இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக மாறியுள்ளது. வசதிகளும் புகழும் அல்ல, நாட்டின் மீதான அன்பும் அர்ப்பணிப்புமே ஒரு மனிதனை உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதை மீனாட்சி சுந்தரம் தனது வாழ்க்கையால் நிரூபித்துள்ளார். எல்லையில் நம் நிம்மதிக்காக போராடும் வீரர்களின் தியாகத்திற்கு இந்த நாடு என்றும் கடமைப்பட்டிருக்கிறது. அந்த வீரர்களின் வரிசையில் இன்று கீர்த்தி சக்ரா வீரராக ஒளிர்கிறார் தேனி மண்ணின் பெருமை மகன் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம். அவரது பெயர் ஒரு விருதின் பெயராக மட்டுமல்ல, வீரத்தின் அடையாளமாகவும், தேசப்பற்றின் சின்னமாகவும் என்றும் நினைவில் நிற்கும்.
