24 special

ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த அமித் ஷா... காங்கிரஸுக்கு செம்ம தில்லா விட்ட சவால்!

Amitshah
Amitshah

சர்தார் வல்லபாய் படேலை தொடர்ந்து விமர்சித்து வந்த காங்கிரஸ் குஜராத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் துளியும் கூச்சம் இன்றி அவரைப் பற்றி புகழ்ந்து பேசுவது தனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. 


இதனால் குஜராத் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீயாய் தீவிரமடைந்து வருகிறது. கம்பத் மற்றும் 92 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத்தில் நடந்த தேர்தல் பேரணியில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். 

கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சர்தார் வல்லபாய் படேலை அவமதிக்க முடிந்த அனைத்தையும் காங்கிரஸ் செய்ததாகவும், குஜராத் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இப்போது அவரைப் புகழ்ந்து பேச ஆரம்பித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார். நாட்டின் முதல் துணைப் பிரதமரின் இறுதிச் சடங்கைக் கூட அரசு முறைப்படி காங்கிரஸ் கட்சி முறையாக செய்யவில்லை எனக் குற்றச்சாட்டினார்.

"காங்கிரஸ் இப்போது சர்தார் படேலைப் புகழ்ந்து பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய சிறுவயதில் இருந்தே எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் படேலைப் பற்றிப் பேசிக் கேட்டதில்லை. மாறாக, படேலை அவமதிக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் அவர்கள் விட்டது கிடையாது. அதற்கு அவரது  இறுதிச் சடங்குகளை சம்பிரதாயமற்ற முறையில் செய்ததே அதை உறுதி செய்கிறது. அவரது நினைவாக எந்த நினைவுச்சின்னமும் கட்டப்படவில்லை" என்றார். 

உலகின் மிக உயரமான நினைவுச்சின்னமான பட்டேலின் சிலையான ஒற்றுமை சிலையை கட்டியதன் மூலம் படேலுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி தான் எனத் தெரிவித்த அமித் ஷா, கம்பத்தின் காங்கிரஸ் வேட்பாளர் சிராக் படேலை, சர்தார் படேலுக்கு ஒற்றுமையின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு புகைப்படத்தையாவது காட்ட முடியும் என சவால்விடுத்தார். 

"காங்கிரஸ் இதுபோன்ற காரணங்களை ஆதரித்தால், அவர்கள் அந்த வாக்குகளை இழக்க நேரிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். நான் எந்த வாக்குகளைப் பற்றி பேசுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர்களின் காலம் இப்போது முடிந்துவிட்டது, பிரதமர் மோடியின் காலம் தொடங்கிவிட்டது. ராகுல் காந்தி, அயோத்திக்கு டிக்கெட் பதிவு செய்யுங்கள். ஏனென்றால் ஜனவரி 1, 2024 அன்று ஒரு பிரமாண்ட கோவில் திறக்கப்பட உள்ளது" என அழைப்புவிடுத்தார். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும், முத்தலாக் தடைச் சட்டத்தையும் காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

- annakizhi