24 special

அவசர பட்டு வார்த்தையை விட்டுடீங்களே உதய்... பதவி தப்புமா?

Udhayanidhi stalin, rnravi
Udhayanidhi stalin, rnravi

அமைச்சர் உதயநிதி ஆளுநருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக சவால் விடுத்து பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய குடிமைப்பணி குரூப் 1 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவியருடன் சென்னை ராஜ் பவனில் உள்ள தர்பார் அரங்கில் கலந்துரையாடினார். அப்போது மாணவர் ஒருவர் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்து கூறிய விவகாரம்தான் தற்பொழுது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. 

ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, 'வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை ஒரு தனி நபரோ, தொண்டு நிறுவனமோ நன்கொடை ஆக பெறுகிறது. அது ஒருமுறை என்றால் பிரச்சனை இல்லை. தொடர்ச்சியாக அத்தகைய நன்கொடை வருமானால் அங்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் (FCR Act) வரும். இந்த சட்டம் மூலம் அனைத்து வெளிநாட்டு நன்கொடைகளும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வரும். இப்படி வரும் நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில நிறுவனங்கள் தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் அந்நிய நிதி பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. போராட்டத்திற்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது. ஏன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்தது? இந்திய தேவையில் 40% தாமிரத்தை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்தது. அதை மூடி விட்டார்கள். இதனால் இந்தியாவின் 40% தாமிர தேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரம் ஏன் முக்கியமானது என்றால் இந்தியாவின் மின்னணு உற்பத்திக்கு முக்கிய தேவை. இதை முடக்கும் வேலையில் பின்னணியில் இருந்தவர்கள் அந்நிய நிதியை பெற்று வந்தது தெரியவந்துள்ளது.  இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக அந்நிய நிதி மூலம் செயல்படும் இத்தகைய நிதி உதவிகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும், அது தற்போது இயலவில்லை. ஆனால், போக போக அது சரியாகும்' என கூறினார். 

இப்படி ஆளுநர் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசியது தமிழக அரசியல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் வெளிநாடுகளில் கூலி வாங்கிக் கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தார்கள், இதனால் இவ்வளவு பாதிப்பு தமிழகத்திற்கு என அதிகாரப்பூர்வமாக மக்களிடையே உறைக்கும் அளவிற்கு சொன்னது ஸ்டெர்லைட்டை வைத்து அரசியல் செய்து வந்த கட்சிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. ஸ்டெர்லைட் மூடப்பட்டதற்கு காரணமே வெளிநாட்டு சதிகள்தான் எனக் கூறியது ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என கூறி வந்த திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் பின்னடைவாக அமைந்து  விட்டது. இதன் காரணமாக ஆளுநர் கூறிய கருத்து நமக்கு பின்னடைவாக போய்விட்டது என அனைத்து இடதுசாரி கட்சிகளும் கடும் கோபத்தில் இருந்து வந்த நிலையில் ஆளுநரின் கருத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆளுநரை மிரட்டும் விதமாக கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

செய்தியாளர்களை சந்தித்த உதயநிதியிடம் ஆளுநர் ஸ்டெர்லைட் போராட்டத்தை வெளிநாட்டிலிருந்து நிதியை பெற்றுக் கொண்டு தூண்டி விட்டதாக கூறி இருக்கிறாரே என கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்கும்போது, 'தூத்துக்குடிக்கு சென்று ஆளுநர் இது போல் பேச முடியுமா? ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு இப்படி பேசுகிறார்! வெளியில் வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் மாணவர்கள் மத்தியிலோ தூத்துக்குடியில் இதேபோன்று பேச முடியுமா நான் சவால் விடுகிறேன். நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை, இதை கண்டிக்கிறேன் தூத்துக்குடியில் போய் ஆளுநர் இப்படி பேச முடியுமா? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, தூத்துக்குடியில் போய் ஆளுநரை இதை பேச சொல்லுங்கள்' என கோபமாக தெரிவித்தார். 

அதாவது ஆளுநர் கருத்தை கூறியதை தூத்துக்குடியில் வந்து பேசிப்பாருங்கள் என மிரட்டும் தோணியில் ஆளுநரை அமைச்சர் உதயநிதி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் அவர் கருத்தை கூறுகிறார், அவர் அவருடைய கருத்தை கூற உரிமை உண்டு அப்படி இருக்கும் சமயத்தில் 'நீங்கள் வெளியில் வந்து பேசிப் பாருங்கள்' என மிரட்டல் விடுக்கும் தோணியிலும், 'முடிஞ்சா தூத்துக்குடி வந்து பேசிப்பாருங்க' என உதயநிதி மிரட்டல் விடுத்திருப்பது ஆளும் கட்சியாக இருக்கிறோம் என்ற ஆணவத்தில் உதயநிதி இப்படி பேசுகிறாரா? என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் வரும் காலங்களில் கடும் புயலை கிளப்பும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் என்றால் பொதுவெளியில் பேசும் போது கவனமாக பேச வேண்டும், நாங்கள் எல்லாம் ஆளுநருக்கு எதிராக பொதுவெளியில் பேச தெரியாமலா இருக்கோம், அதிகாரத்தில் இருந்து ஆளுநருக்கு எதிராக பேச கூடாது, கட்சியின் உறுப்பினர் வேறு பொறுப்பு வேறு, ஆனால் இப்போது நீங்கள் அமைச்சர், ராகுல் காந்தி நிலை வந்துவிட கூடாது இனி பொதுவெளியில் சற்று கவனமாக நிதானமாக பேசுங்கள் என கட்சியில் மூத்த சீனியர்கள் உதயநிதிக்கு அறிவுரை கொடுத்து வருகிறார்களாம்.