
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தொடர்ந்து நடத்திவரும் "விளம்பர நாடகம்" மற்றும் "நிர்வாக அலட்சியம்" ஆகியவை இப்போது தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் நிர்வாகத் திறமையின்மையையும், வெளிப்படைத்தன்மை இல்லாமையையும் வெளிப்படுத்தியதன் மூலம், தி.மு.க. அரசு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் அண்டை மாநிலங்களுக்குப் பறிகொடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம்தென்கொரிய நிறுவனம் 1,720 கோடி ரூபாய் முதலீட்டில் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் தோல் அல்லாத காலணிகள் செய்யும் தொழிற்சாலையை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பெருமிதப்பட்டு எப்போதும் போல் விளம்பரம் செய்து கொண்டது தமிழ்நாடு அரசு. மூன்று மாதங்களே ஆன நிலையில் இந்த நிறுவனத்தை இப்போது ஆந்திராவுக்குக் கொண்டு சென்றுவிட்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதேபோல கடந்த மாதம் கூகுள் நிறுவனத்தின் 87,520 கோடி ரூபாய் மெகா திட்டத்தை விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு போனார்கள். இந்தத் திட்டத்தை நம் மாநிலத்திற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சிகூட செய்யவில்லை.
‘‘தமிழ்நாடு வளர்ந்த மாநிலம். இங்கே நிலம் என்பது மிகவும் அரிது. கேட்பவர்களுக்கு எல்லாம் அதைத் தூக்கிக் கொடுக்க முடியாது. வரப்போவது என்ன மாதிரியான தொழிற்சாலை, அது எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும், அவை அதிக சம்பளம் கொண்ட வேலைகளாக இருக்குமா போன்ற பலவற்றையும் ஆராய்ந்து பார்த்துதான் முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது'' என்று தென்கொரிய நிறுவனத்தின் வெளியேற்றத்துக்குக் காரணம் சொல்கிறார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. இதெல்லாம் அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும்போது அவருக்குத் தெரியாதா? அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் ஆக்குவோம்' என்று தமிழ்நாட்டின் முதல்வரும் அமைச்சர்களும் அடிக்கடி மார்தட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதை மனதில் வைத்து முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தினார்கள். பல நாடுகளில் இருந்தும் முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலினே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு குடும்பத்துடன் சென்று வந்தார் முதல்வர்.
மேலும் தி.மு.க அரசு அமைந்தது முதல் இதுவரை தமிழகத்துக்கு 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கின்றன. 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம்'' என்று சமீபத்தில் பெருமிதப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். டி.ஆர்.பி.ராஜா இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘‘இதில் 77 சதவிகிதம் நடைமுறைக்கு வந்துவிட்டன'' என்றார். ஆனால், ‘‘இந்த ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு வரவில்லை'' எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதோடு இதுகுறித்து வெள்ளை அறிக்கையைக் கொடுக்கும்படி அரசைக் கேட்டார்கள்.
டி.ஆர்.பி.ராஜா இவர்களின் வாயை அடைப்பது மாதிரி வெள்ளை அறிக்கை கொடுப்பார் என்று பார்த்தால், ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் காட்டி ‘இதுதான் வெள்ளை அறிக்கை' என்று எதிர்க்கட்சித் தலைவரை எகத்தாளம் செய்வதாக நினைத்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்களைப் எகத்தாளம் செய்கிறார்.
தி.மு.க. அரசு விளம்பரப் பலகைகளிலும், சமூக ஊடகங்களிலும் மட்டுமே வெற்றிகளைக் காட்டுகிறது. ஆனால், உண்மையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறி, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டது, வெறும் விளம்பரங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறது என்பதே உண்மை. நிர்வாகத் திறனில் தோல்வியடைந்து, பொய்ப் புள்ளிவிவரங்களைக் கூறி, இளைஞர்களுக்குச் செய்த துரோகத்திற்கு தி.மு.க. அரசு கண்டிப்பாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
