24 special

தமிழக காவல்துறையா? அறிவாலயத்தைக் காக்கும் துறையா..? அண்ணாமலை நெத்தியடி.!

Sylendra babu,  annamalai
Sylendra babu, annamalai

கோயம்புத்தூரில் கார் வெடிப்பு தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை கிளப்பி வருகிறார். அதிர்ச்சி கிளப்பும் வகையில் புதுப்புது விஷயங்களைக்கூறி அதிரடி கிளப்பி வருகிறார். ‘’கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை  ஓரிரு நபர்கள் அல்ல. பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள். ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு. டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் இதில் எச்சரிக்கை விடுத்தும் தமிழ்நாடு போலீஸ் கோட்டை விட்டுவிட்டுள்ளது. காவல்துறை  இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்படவில்லை. என்ஐஏ இதை உடனே விசாரிக்க வேண்டும். நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது, என்று அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்திருந்தார்.


இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறைக்கும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான சொற்போர் தீவிரமடைந்திருக்கிறது.காவல்துறை மீது அவதூறு பரப்புவதாக கூறி தமிழ்நாடு காவல்துறை , அண்ணாமலை மீது ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை மற்றொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில், "பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசை திருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம்? இந்தக் குண்டு வெடிப்பிற்கு தமிழக ஆளுநர் காரணம் என சமூக வலைதளங்களில் பரப்பிவரும் திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தமிழக காவல்துறையா? அறிவாலயத்தைக் காக்கும் துறையா? முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரியாகவும், தமிழக பாஜகவின் தலைவராகவும் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன்.இந்தச் சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அதை தமிழக அரசு மற்றும் காவல்துறை அறிவிக்காமல் மௌனம் காப்பது ஏன்? தனிப்பிரிவின் இந்த அறிக்கையை காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு இதுவரை பர்க்கவில்லை என்பதை நேற்றைய அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

தற்போதுதான் சிலிண்டர் வெடிப்பிலிருந்து குண்டு வெடிப்பிற்கு தமிழக அரசு மாறியுள்ளது.இதை தீவிரவாதத் தாக்குதல் அல்லது தற்கொலைப்படைத் தாக்குதல் எனக் குறிப்பிட பல மாதங்கள் ஆகலாம்.இந்த மாத 18ஆம் தேதி மத்திய அரசு வழங்கிய சுற்றறிக்கை பொதுவானது.அதில் கோவை தாக்குதல் பற்றி எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை என சிறுபிள்ளைத்தனமான வாதத்தை தமிழக காவல்துறை நேற்றைய அறிக்கையில் முன்வைத்துள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் தனிநபராக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 96 நபர்களின் பட்டியலை அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன்னரே காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறையிடம் காவல்துறையின் ஒரு தனிப்பிரிவு வழங்கியது. அந்த அறிக்கையில் ஜமேஷா முபீனின் பெயர் 89ஆம் இடத்தில் இருக்கிறது.

கடந்த 23ம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி என்ற செய்தி வந்தது. அன்று மதியம் இதைப்பற்றி பதிவிட்டிருந்த நான் காவல்துறை உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கியதை பாராட்டினேன். மேலும் இந்த வெடி விபத்தில் இருக்கும் மர்மத்தை காவல்துறை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.23ம் தேதி இரவு நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை. இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ஐஎஸ்ஐஎஸ் என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்து 36 மணி நேரம் ஆன பின்பும் தமிழக முதல்வர் இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தேன். ஆனால் இன்றுடன் இந்த சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை தமிழக முதல்வர் மவுனம் காப்பது ஏன்? 6 தனிப்படை அமைத்து விசாரித்து கொண்ருக்கிறோம் என சொல்லும் காவல்துறை அடுத்த கட்ட உண்மைகளை சொல்வதற்கு தயங்குவது ஏன்? இதுவரை இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்று சொல்ல மறுப்பது ஏன்? அக்டோபர் 21ம் தேதி ஜமேஷா முபின் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இதை காவல்துறை மறுக்க முடியுமா?

இறந்த ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டினோம். காவல்துறை இதை மறுக்குமா? அக்டோபர் 23ம் தேதி முன்னரே ஜமேஷா முபின் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது. 96 நபர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு.

அதில் ஜமேஷா முபின் 89ஆம் இடத்தில் உள்ளார். இந்த வருடம் ஜூன் 19ம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை.

கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசைதிருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம் என்பதை காவல்துறை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை.