24 special

200 பவுன்சர் பாதுகாப்புடன் தேவர் ஜெயந்தி க்கு சென்ற எடப்பாடி...!!

edapadi, devar
edapadi, devar

தேவர் சமுதாய அமைப்புகளும் அந்த சமுதாயத்தை சேர்ந்த பெரும்பான்மை மக்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பதாக உளவுத்துறை தொடங்கி அதிமுக சீனியர்கள் என பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை கொடுத்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் பலத்த பாதுகாப்புடன் பசும்பொன் சென்றார்.வழக்கத்திற்கு மாறாக போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு இருப்பதுடன் 200 பவுன்சர்கள் பாதுகாப்புடன் வழியில் கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றால் பாதிக்கபடாமல் இருக்க காருக்கு பதிலாக வேனில் சென்றார் எடப்பாடி பழனிசாமி ஆனால் இத்தனை பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி எதை எதிர்பார்த்தாரோ அது தலைகீழாக மாறி விட்டது.


அதிமுக தொடங்கிய காலம் தொட்டே அக்கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக முக்குலத்தோர் சமுதாயம் இருந்து வருகிறது. கட்சி தொடங்கப்பட்டு சந்தித்த முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆரால் நிறுத்தப்பட்ட வேட்பாளரான மாயத்தேவர் முக்குலத்தோர் சமுதாயம் என்பது குறிப்பிடத்தக்கது.எம்.ஜி.ஆரை தொடர்ந்து ஜெயலலிதாவும் முக்குலத்தோர் வாக்கு வங்கியை தக்கவைக்க அந்த சமுதாயத்திற்கு கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுத்தார்.  அதன் வரிசையில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு13 கிலோ எடையில் தங்கக்கவசம் வழங்கிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆண்டு தோறும் தவறாமல், குருபூஜைக்கும் அவர் சென்று வந்தார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு 2017 ல் நடந்த தேவர் குருபூஜையின் போது எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ் ஒரு அணியாகவும், சசிகலா டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் இருந்தனர். இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான அதிமுக, தங்களுக்கு தான் தங்க கவசம் கொடுக்க வேண்டும் என வங்கியிடம் முறையிட்டனர்.  பின்னர் கடும் வாக்குவாதத்திற்கு பிறகு, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தங்கக்கவசத்தை வங்கி அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர், ராமநாதபுரம் ஆட்சியர் மூலம் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் தங்க கவசம் கொடுக்கப்பட்டது. பசும்பொன் சென்ற எடப்பாடி பழனிசாமி தங்க கவசம் கொடுத்து குருபூஜையில் கலந்துக்கொண்டார்.இதனிடையே 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இது மற்ற சமூகத்தினரிடையே விவாதத்துக்குள்ளான நிலையில், முக்குலத்தோர் சமுதாய மக்களை கொந்தளிப்படைய செய்தது.   இதனிடையே, 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்டார்.

ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனிடம் அளிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு நடந்த தேவர் ஜெயந்தியின் போது இரண்டாவது முறையாக தங்க கவசம் யார் பெறுவது என மோதல் ஏற்பட்டது.விவகாரம் நீதிமன்றம் சென்றதில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் தங்க கவசத்தை  இரு தரப்பிடமும் தர மறுத்தது. மேலும், ராமநாதபுரம்  மாவட்ட வருவாய் அலுவலரிடம்  தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

அதை தொடர்ந்து நடைப்பெற்ற தேவர் குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு காரணத்தால் பங்கேற்கவில்லை.சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பசும்பொன்னிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு, காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்திய போது தேவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் பசும்பொன்னில் இன்று 116 வது தேவர் ஜெயந்தி மற்றும் 61 வது குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றப்பின் முதன் முறையாக சென்றார்.

எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வரக்கூடாது என தேவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழிக்கப்பட்டது. இதன் காரணமாக பசும்பொன்னில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது .இவ்வளவு பாதுகாப்புடன் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்ற நிலையிலும் ஆர் பி உதயகுமார் ஏற்பாடு செய்த அதிமுகவினரை தவிர தேவர் சமுதாய மக்கள் திரும்பி கூட எடப்பாடி பழனிசாமியை பார்க்கவில்லை, இதுவரை எந்த தலைவரும் இப்படி உயிருக்கு பயந்து இவ்வளவு பாதுகாப்புடன் பசும்பொன் வந்தது இல்லை.

இப்படி பயந்து பயந்து எடப்பாடி பழனிசாமி 100 பவுன்சர்களை வைத்து கொண்டு பசும்பொன் வந்தது தற்போது விவாத பொருளாக மாறி இருக்கிறது. அதிமுக ஒரு காலத்தில் எப்படி இருந்த இயக்கம் ஜெயலலிதா பசும்பொன் வருகிறார் என்றால் அவரை வரவேற்க அந்த சமுதாயமே மகிழ்ச்சியுடன் வரவேற்கும்.ஆனால் இப்போது அந்த கட்சியின் பொதுச்செயலாளர் உயிருக்கு பயந்து பவுன்சர்கள் உதவியுடன் பசும்பொன் வந்து இருக்கிறார் இதுவா அதிமுகவின் நிலை என பலரும் விமர்சனம் செய்கின்றார். எடப்பாடி பழனிசாமி பசும்பொன் போனார் என்ற செய்தி மறைந்து பவுன்சர்கள் பாதுகாப்புடன் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று திரும்பினார் என்ற செய்தியே இப்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.