24 special

நான் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா..? திமுக தலைமைக்கே ஜெர்க் கொடுத்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

Stalin, palanivel thiagarajan
Stalin, palanivel thiagarajan

தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மதுரையில் திமுக அணிக்குள் நடக்கும் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒத்துப்போகவில்லை.


மாவட்டச் செயலாளர் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு அவர்களது நட்பில் விரிசல் அதிகரித்து விட்டதாகவே பழனிவேல் தியாகராஜனின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. சமீபத்திய நிகழ்வுகளில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்வதில்லை. இதேபோல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டால் மூர்த்தி ஆப்சென்ட்.போதாக்குறைக்கு மதுரை மாவட்ட செயலாளர் கோ.தளபதியும் பழனிவேல் தியாகராஜனுடன் மோதல் போக்கை கடைபிடிக்க, கொதித்துக் கிளம்பி இருக்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ’சில திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு, அதற்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி முதல்வர் வேதனையுடன் பேசினார். பொது இடங்களில் சிலர் நடந்து கொண்டதன் மூலம் திமுகவுக்கு பழிக்கு ஆளானது. நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். கண்ணியமான சொற்களை பயன்படுத்துங்கள்’’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து அமைச்சர் பொன்முடி "ஓசி" பேருந்து என்று தான் கூறிய கருத்திற்கு இன்று வருத்தமும் தெரிவித்தார். இந்த நிலை அடுத்த அணுகுண்டாக பிடிஆர் பழனிவேல் ராஜன் பேசியுள்ளது திமுக தலைமையையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ’’திமுகவில் சில நாட்களாக வரும் தகவல்கள் வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. எப்போதும், தயவு செய்து குட்டி மிருகங்களாக ஆகாதீர்கள்.

இன்று நான் சொல்கிறேன். நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து.பொதுவாழ்க்கையை விட்டுவிட்டு வெளியே போகுவது வரை யாரையும் நான் கட்டுப்படுத்த மாட்டேன். அவரை போய் பார்க்காதே.. அவருடன் பேசாதே.. இவருடன் பேசாதே.. அந்த கூட்டத்தில் கலந்து கொள் என்று கூற மாட்டேன். என்றும் நான் அப்படி யாரிடமும் சொல்ல மாட்டேன். அவர் பெயரை கட் அவுட்டில் போடாதே. அவரின் படத்தை கட் அவுட்டில் போடாதே என்று சொல்லவே மாட்டேன். அப்படி எல்லாம் நான் என் வாழ்க்கையில் சொல்லவே மாட்டேன். நான் பெரிய மனிதன். அப்படி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அப்படியே எனக்காவும் நான் பேச மாட்டேன். என் படத்தை போடு, என் பெயரை போடு என்று சொல்ல மாட்டேன். 

நான் பெரிய மனிதன். எனக்கு அது அவசியம் இல்லை. ஐடி விங் பொறுப்பை என் தலைவர் எனக்கு வழங்கினார். அப்போது ஐடி விங் பேப்பரில் கூட இல்லை. அதை பெரிதாக்கி, 4 வருடங்களில் 1 நாள் கூட விடாமல் உழைத்தேன். அந்த நாட்களில் ஒரு நாள் கூட எனக்கு போஸ்டர் ஒட்டு. ஏர்போர்ட்டில் வந்து எனக்காக கோஷம் எழுப்பு என்று கேட்டது இல்லை. எனக்கு போஸ்டர் ஓட்ட சொல்லியதே இல்லை எனக்காக ஜால்ரா அடி என்று யாரிடமும் நான் அப்போது சொல்லியதே இல்லை. நான் பெரிய மனிதன் . நான் அப்படி எல்லாம் ஒரு போதும் என் தொண்டர்களிடம் சொல்லவே மாட்டேன். அது மிகவும் தவறு. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் எனக்கு வேதனை அளிக்கிறது.

கடந்த முறை நான் பங்கேற்காத அதே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை இம்முறை எனது முயற்சியில் மதுரையில் இக்கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்துள்ளேன். யார், யாருக்கு என்ன திறமையுள்ளது என அறிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.கோ.தளபதி, தனது ஆதரவாளர்கள் யாரும் பிடிஆரின் விழாவுக்கு செல்லக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். கோ.தளபதி மிரட்டுவது பிடிஆருக்கு வேதனை அளிப்பதாகவும். இதனால் சுயமரியாதையை ஒருபோதும் இழக்க மாட்டேன் எனவும் பிடி.ஆர் தனது ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து, கோ.தளபதி ஆதரவாளரிடம் பேசினோம்.’’பிடிஆருக்கு முன்பிருந்தே கோ.தளபதி சீனியர்.

ஆனால், எங்களை மட்டுமல்ல, பிடிஆர் யாரையும் மதிப்பதில்லை. மதுரை மாநகராட்சி தேர்தல் பணிகள் ஆரம்பத்ததில் இருந்தே, அமைச்சர்களான மூர்த்திக்கும்- பிடிஆருக்கும் இடையே மறைமுக போட்டி நிலவுகிறது. அமைச்சர் பி.மூர்த்தியின் ஆதரவாளர் வாசுகி சசிகுமார் மேயர் பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பி.டி.ஆரின் நெருங்கிய ஆதரவாளர் பொன்.வசந்தின் மனைவி, இந்திராணிக்கு மேயர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போதில் இருந்தே அமைச்சர் பி.டி.ஆர் சொல்வதை கிளிப்பிள்ளை போல் கேட்டு நடந்து கொள்கிறார்.

தன்னைக் மேயர் பதவிக்கு கொண்டு வந்தது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்தான் என்பதால், அமைச்சர் மூர்த்தியை மேய் கண்டு கொள்வதே இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் கூட புத்தக திருவிழாவில் அமைச்சர் மூர்த்தி வந்தபோது மேயர் ஒதுங்கி நின்றது மனக்குறையை ஏற்படுத்தியது. 

மேயர் பதவியில் தன் பலத்தை காட்டிய பி.டி.ஆர்., மீண்டும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் கூட தன் இருப்பைக் காட்டவேண்டும் என மெனக்கெட்டு தனது ஆதரவாளரான மாணவர் அணி மாநில துணை செயலாளர் அதலை செந்தில்குமாரை மாவட்டச் செயலாளராக்க முயன்றார்.

கோ.தளபதிக்கு அமைச்சர் மூர்த்தியும், அதலை செந்திலுக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் மறைமுக ஆதரவு அளித்தனர். தி.மு.க., தலைமை கோ.தளபதியை தேர்வு செய்து லிஸ்ட்டில் வைத்திருந்தாலும் செந்திலை மாவட்ட செயலாளர் ஆக்கினால் தான் மதுரை மாநகரை ஒட்டுமொத்தமாக கட்டுக்குள் வைக்க முடியும் என பி.டி.ஆர். முடிவெடுத்தார்.

இந்த தேர்தல் அமைச்சர்கள் மூர்த்திக்கும், பிடிஆர்  தியாகராஜனுக்கும்  இடையே நடந்த பனிப்போர் என்றே சொல்ல வேண்டும். மதுரை மேயர் தேர்வில் தியாகராஜன் தன்னிச்சையாக  செயல்பட்டு தனது ஆதரவாளரை பதவிக்கு கொண்டு வந்தார். 

மாவட்ட செயலாளர் தேர்தலிலும் அவர் மறைமுகமாக செயல்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோ.தளபதியை வெற்றி பெற வைத்தார்கள்.

சென்னையில் மூத்த அமைச்சர்கள் பலரும் மறைமுகமாக மூர்த்திக்கு ஆதரவு தெரிவித்ததால்  தளபதி  வெற்றி பெற்றுள்ளார். தியாகராஜனுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதனால் அமைச்சர் மூர்த்தி கை ஓங்கி விட்டது. இது, அமைச்சர் தியாகராஜனுக்கு பின்னடவைவாகவே பார்க்கப்பட்டுகிறது. இதனை சகித்துக் கொள்ள முடியாத பழனிவேல் தியாகராஜன், இந்தப்பேட்டியில் கூட, தன்னை அடிக்கடி பெரிய மனிதன் எனக் கூறிக் கொண்டுள்ளார்.

மேலும் தான் மட்டுமே அறிவாளி என்கிற ரேஞ்சிலும் பேசியிருக்கிறார்’’என்கிறார் அந்த திமுக உடன்பிறப்பு. பிடிஆர் பழனிவேல் ராஜனின் இந்தப்பேச்சு திமுக தலைமைக்கு நெருடலை கொடுத்துள்ளது. பொதுவெளியில் அவர் இப்படி பேசியிருக்கக்கூடாது என்கிறது அறிவாலய வட்டாரம்.